கொரோனாவால் இறந்தவர் உடலைத் தர பத்திரம் எழுதி வாங்கிய அவலம்! மதுரை தனியார் மருத்துவமனை அடாவடி!

 -MMH

கொரோனாவால் இறந்தவர் உடலை வழங்குவதற்கு 100ரூபாய் பத்திரத்தில் எழுதி வாங்கி, உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தத் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு, இதுவரை 4,444 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் தொற்றால் பாதிப்புக்குள்ளானவர்கள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், புதூர் - அழகர்கோவில் சாலையில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் நாகேந்திரன் என்பவர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது மனைவி சத்யா, மகள் காவியா ஆகிய இருவரையும் சிகிச்சைக்கு அனுமதித்திருந்தார். இதில் நாகேந்திரனின் மனைவி மற்றும் மகள் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். திடீரென நாகேந்திரனுக்கும் தொற்று பாதிப்பு அதிகரித்தது.

இதையடுத்து மருத்துவமனையில் நாகேந்திரனும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் சிகிச்சையளிக்க 'பேக்கேஜ் சிஸ்டம்' எனக்கூறி, முன் பணமாக, ₹.2 லட்சத்தை மருத்துவமனை நிர்வாகம் நாகேந்திரனின் உறவினர்களிடம் பெற்றுக்கொண்டது. சிகிச்சை பெற்றுவந்த நாகேந்திரன் திடீரெனமே 4 அன்று இரவு உயிரிழந்தார். உடனே மருத்துவமனை நிர்வாகம், உயிரிழந்தவரின் உடலைத் தர வேண்டுமெனில் மீதி பணம் ஒன்றரை லட்சம் ரூபாயைச் செலுத்த வேண்டும் என்றனர்.

மீதமுள்ள பணத்தைச் செலுத்தத் தற்போது வழியில்லையென நாகேந்திரனின் உறவினர்கள் கூற, மீதியை ஒரு மாத தவணையில் கட்டுவதாக 100 ரூபாய் பத்திரத்தில் எழுதி கொடுங்கள் உடலை தருகிறோம் என்று மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளனர். தொடர்ந்து பத்திரத்தில் எழுதி கையெழுத்திட்டு வாங்கிக் கொண்டு, உடலை மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் வழங்கியுள்ளனர். மேலும் ஆம்புலன்சில்தான் உடலை கொண்டு செல்ல வேண்டும் எனக்கூறி, 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ₹.10 ஆயிரம் மருத்துவமனை தரப்பில் தனியாக வசூலித்துள்ளனர்.

இதுதொடர்பாக மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஆழ்வார் கூறுகையில், "உயிரைப் பணையம் வைத்து நோயாளிகளை காப்பாற்றி வருகிறோம். தற்பொழுது, மதுரையில் ஆக்ஸிஜன் சரியாக கிடைக்காததால் மற்ற மாவட்டங்களில் இரு மடங்கு விலை கொடுத்து வாங்கி, நோயாளிகளைக் காப்பாற்றி வருவதாகவும், கடந்த பதினான்கு நாட்களும் மருத்துவமனைக்கு உறவினர்கள் யாருமே வராத சூழ்நிலையில், நாங்களே அனைத்து உதவிகளையும், சேவைகளையும் செய்து வந்தோம். மீதிப் பணத்தைக் கட்டுமாறு கூறியதும், இறந்தவரின் உறவினர்கள் தகாத வார்த்தையில் பேசியதாகத்" தெரிவித்தார்.

கரோனா தொற்றுக்குச் சிகிச்சையளிக்கத் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அனுமதியளித்த நிலையில், அதை வைத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தனியார் மருத்துவமனைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டுமென தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- பாரூக், சிவகங்கை.

Comments