இன்று மறக்க முடியாத நாள்! ஸ்டாலின் பெருமிதம்!!

        -MMH

சென்னை: 'முதல்வர் பதவி ஏற்கும் இன்று (மே 7), என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: தேர்தலில், தமிழக மக்கள் மகத்தான தீர்ப்பை வழங்கி உள்ளனர். ஐந்து முறை, தமிழகத்தை ஆண்ட கட்சி தி.மு.க., ஆறாவது முறையும் ஆட்சி அமைக்கும், அரிய வாய்ப்பை, தமிழக மக்கள் மனமுவந்து வழங்கி இருக்கின்றனர். தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்கும் நல்வாய்ப்பை, மக்கள் வழங்கி உள்ளனர். அண்ணாதுரை, கருணாநிதி அலங்கரித்த நாற்காலியில், உட்கார வைக்கப்படும் அளவுக்கு, உழைப்பையே மூலதனமாகக் கொண்டு, என்னை நான் படிப்படியாக வளர்த்துக் கொண்டதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள் அனைவரையும், சென்னைக்கு அழைத்து, அவர்களுக்கு முன்னால், அவர்களின் மனம் நிறைவு கொள்ளும் வண்ணம் பதவியேற்க முடியவில்லையே என்பது தான், என் கவலைக்கு காரணம். இந்த வெற்றிக்கு காரணமான, கதாநாயகர்களான தொண்டர்கள் முன், விழாவை நடத்தலாம் என, தேர்தலுக்கு முன் சிந்தித்து வைத்திருந்தேன். ஆனால், கொரோனா என்ற பெருந்தொற்று, இரண்டாவது பேரலையாக எழுந்து வீசும் இந்த சூழலில், அத்தகைய மக்கள் கூடும் மாபெரும் விழா நடத்த இயலாது.

அதனால், கவர்னர் மாளிகையில், மிக எளிய முறையில், இன்று, 9:00 மணிக்கு, தொண்டர்கள் இருக்கும் திசை நோக்கி வணங்கி, தமிழக முதல்வராக பொறுப்பேற்கிறேன். வீட்டிலிருந்து, 'டிவி' நேரலையில் காணுங்கள். தொண்டர்கள் உழைப்பு, தி.மு.க., ஆட்சியை மலர வைத்தது. தொண்டர்கள் வாழ்த்து, எங்களை பெருமைப்படுத்தும். அனைவரும் ஒன்று சேர்ந்து, தமிழக மக்கள் அனைவருக்கும் சம உரிமையும், கடமையும் உடைய, உயர்வான தமிழகத்தை உருவாக்கி தருவோம். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ருக்மங்கதன், சென்னை.

Comments