இன்று உலக பத்திரிகை சுதந்திர நாள்!
இத்தினம் பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் 'மனித உரிமைகள் சாசனம்' பகுதி-19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே 'பத்திரிகை சுதந்திர சாசனம்' முன்வைக்கப்பட்டது. இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ ஃகிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கி கௌரவிக்கின்றனர்.
'எல் எஸ்பெக்டேட்டர்' என்ற பத்திரிகையில் பணிபுரிந்த கிலெர்மோ, போதை பொருள் மாபியா கும்பலின் சட்டவிரோத கடத்தலை அம்பலப்படுத்தியவர். இதனால் கடந்த 1986ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அவரது பத்திரிகை அலுவலகத்தின் வாயிலில் வைத்து சமூகவிரோதிகளால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பத்திரிகை சுதந்திரத்திற்காக தனது இன்னுயிரை தந்த அவரது பணியை பாராட்டி, கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் கிலெர்மோ பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது.2018ம் ஆண்டிற்கான விக்கிபீடியாவின் பத்திரிக்கை சுதந்திர அட்டவணையில் கண்டுள்ளபடி உலகளவில் பத்திரிக்கை சுதந்திரம் மிக்க நாடுகளில் நார்வே முதலிடத்தைப் பெற்றுள்ளது. இவ்வட்டவணையில் இந்தியா 138வது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய செய்திகள் நாளைய வரலாறு என்பதாலேயே பத்திரிகைகள் காலத்தின் கண்ணாடி எனப்படுகிறது. அதனால் உண்மையை மட்டுமே உரக்கச் சொல்வோம் பத்திரிகை உறவுகளே!.
-சோலை. ஜெய்க்குமார்/ Ln. இந்திராதேவி முருகேசன்.
Comments