மு.க.அழகிரியை சந்திக்கிறாரா புதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

   -MMH

சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் மிகப்பெரிய வெற்றி கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கு பெரும் மகிழ்ச்சியையும் கூடவே நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாம். கருணாநிதி இல்லாமல் அவர் குடும்பத்தினர் சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதாலும், இந்த வெற்றிச் செய்தியை அவரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத புதிய சூழலும் குடும்பத்திற்குள் ஒரு விதமான பாசப்போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

அக்கா செல்வி, தம்பி தமிழரசு இருவரும் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்களாம். அப்போது தான் அப்பா வைப் பற்றி நினைவு கூர்ந்து நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். அப்போது அண்ணன் அழகிரி பற்றியும் பேச்சு வந்துள்ளது. உடனடியாக அவருக்கு போன் செய்து ஆசி கேட்டாராம் ஸ்டாலின்.

தம்பியே அழைத்துப் பேசியதால் நெகிழ்ச்சி அடைந்த அழகிரியும் மனமுவந்து பாராட்டு தெரிவித்தாராம். சென்னைக்கு நேரில் வருகிறேன் என்று சொன்னவரிடம், நீங்கள் அண்ணன், நான் வந்து உங்களிடம் ஆசி வாங்குவது தான் சரியாக இருக்கும். கொஞ்சம் பொறுங்கள் என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். 

கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால், ஆளுநர் மாளிகையிலேயே பதவியேற்பு விழாவை மிகவும் எளிமையாக நடத்த உள்ளாராம் ஸ்டாலின். விரைவில் அண்ணன் மு.க.அழகிரியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற உள்ளாராம். அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கான எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்தும் குடும்ப அளவில் ஆலோசனை நடைபெறுகிறதாம். 

மு.க. தமிழரசுவைப் பொறுத்தவரையில் அண்ணன் ஸ்டாலினுடன் துணையாக இருந்தது போல் , தன்னுடைய மகன் அருள்நிதியும் அண்ணன் உதயநிதிக்கு பக்க பலமாக இருப்பது தான் விருப்பமாம். மு.க. அழகிரியைப் பற்றி டக்கென்று ஒரு வரியில் சொல்லுங்கள் என்று ஒரு பேட்டியின் போது கேட்ட போத பளிச்சென்று " என் அண்ணன்" என்று கூறியிருந்தார் ஸ்டாலின். அண்ணன் மீதான தம்பியின் பாசத்தை வெளிப்படுத்துவதாக அந்த பதில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்தி\க்காக,

-I. அனஸ், V. ஹரிகிருஷ்ணன்.

Comments