செய்தித்தாள், காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர்!-- மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

     -MMH
     தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க முன்கள பணியாளர்களான மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதில் பத்திரிகையாளர்களின் பணியும் கவனிக்கத்தக்கது. மக்களுக்கான விழிப்புணர்வுகள், பாதிப்புகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து களத்திற்கே சென்று எடுத்துரைக்கின்றனர்.

இந்த நிலையில் பத்திரிகையாளர்களுக்கு  மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சராக நாளை மறுநாள் பதவியேற்கவிருக்கும் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன.

கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள்.

செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும், என்று அவர் அறிவித்துள்ளார்.

-சோலை. ஜெய்க்குமார்/ Ln. இந்திராதேவி முருகேசன். 

Comments