கண்ணீர் விட்டு அழுத மயில்சாமி.. தூக்கி அடித்த விருகம்பாக்கம்.. இவருக்கே இந்த நிலைமையா..?

     -MMH

     சென்னை: விருகம்பாக்கம் தொகுதியில் டெபாசிட்டை இழந்துள்ளார் நடிகர் மயில்சாமி. இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் மயில்சாமி சுயேச்சையாக போட்டியிட்டார். இதே தொகுதியில்தான் மக்கள் நீதி மய்யம் சினேகனும் போட்டியிட்டார்.

மயில்சாமி ஏழு சுற்றுகள் முடிவின்போது வெறும் 886 வாக்குகளையே பெற்றிருந்தார். அப்போதே ஒருவித அதிர்ச்சி பரவலாக தோன்றியது. காரணம், தேர்தல் பிரச்சாரத்தின்போது, மக்களை கவர ஏராளமான யுத்திகளை மயில்சாமி கையாண்டார். அவைகளை தொகுதி மக்களும் நன்றாகவே ரசித்தனர். ஆனால், அவையெல்லாம் ஒரு பொழுது போக்காகவே போய்விட்டது. தேர்தல் என்று வரும்போது திமுக, அதிமுக என்ற இயல்பான மனநிலைக்கே சென்றும் விடுகின்றனர்.

சுயேச்சையாக ஏன் போட்டியிடுகிறேன் என்று மயில்சாமி ஒரு சினிமா விழாவில் பேசியிருந்தார். அப்போது, "நான் சுயேச்சையா நிக்கிறதுக்கு முக்கிய காரணமே டெல்லியில் போராடும் விவசாயிகள்தான். மனசு தாங்கல.. 100 நாளைக்கு மேல போராட்டம் பண்றாங்க. யாருமே போய் பேச மாட்டேங்களேன்னு வேதனை. என்னுடைய எதிர்ப்பை எப்படி காட்டறதுன்னு தெரியல. அதனாலதான் சுயேச்சையா நின்னேன்.

எனக்கு எம்எல்ஏ ஆசையெல்லாம் அப்பறம். ஆனால், எனக்கு எத்தனை ஓட்டு வருதோ தெரியாது. வரும் ஓட்டுக்கள் எல்லாமே மத்திய, மாநில அரசுக்கான எதிர்ப்பு ஓட்டுக்கள். அது மட்டும் தெரியும்" என்று சொல்லும்போதே கண்ணீர் விட்டு அழுதார் மயில்சாமி.

மயில்சாமியை பொறுத்தவரை எம்ஜிஆரின் தீவிர ரசிகர். ஜெயலலிதா மரணம் அடையும்வரை அதிமுகவில் இருந்தார். பிறகு அக்கட்சியில் இருந்து வெளியேறி சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை வெள்ளம், கொரோனா ஊரடங்கு போன்ற காலங்களில் தனது பகுதி மக்களுக்கு உணவு உட்பட பல்வேறு உதவிகளை செய்தவர் மயில்சாமி. இதன்மூலம் அந்த தொகுதியில் மக்களின் நன்மதிப்பையும் பெற்றிருப்பவர். அதாவது எம்ஜிஆருக்கு அடுத்து சிறந்த வள்ளல் என்று மயில்சாமியை சொல்வார்கள். இதைதான் விவேக் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

இந்த மயில்சாமி இருக்கானே.. கையில் இருக்கிறதையெல்லாம் கொடுத்துடுவான். கஷ்டப்பட்டு சம்பாதிச்சு ஒரு எம்ஜிஆர் டாலர் வாங்கி கழுத்துல போட்டிருந்தான். ஆனால், சுனாமி வந்தப்போ அந்த தங்க செயினையே கழட்டி தந்துட்டான். அப்படி ஒரு வித்தியாசமான கேரக்டர்.. மிக சிறந்த மனிதன்’ என்று அந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட அரை மணி நேரம் புகழ்ந்தும் பேசியிருந்தார். மயில்சாமியின் உதவும் குணம், கரையும் மனசு, அடுத்தவர்களுக்காக துடிதுடித்து போவது என, விவேக் தவிர இவ்வளவு விலாவரியாக இதுவரை யாரும் பேசியதும் இல்லை.

இப்படிப்பட்ட மயில்சாமிக்கு வெறும் 1,440 ஓட்டுக்கள்தான் தொகுதிக்குள் கிடைத்துள்ளது என்பது அதிர்ச்சிதான். இத்தனைக்கும் அந்த தொகுதிக்குதான் மயில்சாமி விழுந்து விழுந்து பேரிடர் காலங்களில் உதவினார். அதைவிட, நம் மக்கள் எதைப் பார்த்து வாக்களிக்கிறார்கள் என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது. அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்கள் என்று நினைத்துதான், எத்தனையோ புதுமுகங்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள். ஆனால், நல்லது செய்துவிட்டு அதன்பிறகு அரசியலுக்கு வந்த மயில்சாமிக்கே இந்த நிலைமை என்றால்?!!

-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.

Comments