ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல்! இடையில் புகுந்த சசிகலா!!!

    -MMH

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பெற்று திமுக ஆட்சி அமைத்திருக்கிறது. 66 இடங்களை மட்டுமே பிடித்து ஆட்சி அதிகாரத்தை இழந்த அதிமுகவில் கோஷ்டி பூசல் வெடித்திருக்கிறது.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்கிற கேள்வி எழுந்த போது தான், ஓ. பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிச்சாமி இடையே இந்த கோஷ்டி பூசல் வெடித்திருக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்பதாலும், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்து விட்டுக் கொடுத்ததாலும் இந்த முறை எதிர்க்கட்சித் தலைவர் பதவி தனக்கு வேண்டுமென்று கொடி பிடிக்கிறார் ஓபிஎஸ். தேர்தலில் செலவு செய்தவன் நான், 234 தொகுதிகளிலும் சுற்றி பிரச்சாரம் செய்தவனும் நான். அதனால், கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தனக்குத் தான் வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

நேற்று முன்தினம் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த மோதல் உச்சத்தில் வெடித்தது. ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக விவாதித்தது ஒருபக்கமிருக்க, ஓபிஎஸ்- இபிஎஸ் இருவருமே நேருக்குநேர் தனக்குத்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டும் என்று வாதம் செய்தனர். இதனால் கூச்சலும் குழப்பமும் எழுந்ததால் கூட்டம் எந்த முடிவும் எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதை அடுத்து ஓபிஎஸ் -இபிஎஸ் இருவரும் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்த சென்றனர். அங்கேயும் ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பி பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தினர். ஓபிஎஸ்க்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வில்லை என்றால் தீக்குளிக்கவும் தயங்க மாட்டோம் என்று அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். இந்த பரபரப்புக்கு மத்தியில் நாளை காலையில் மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைக்கின்றனர். இதில் என்ன முடிவு எட்டப்போகும் என்று அதிமுகவினர் பதட்டத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சசிகலா ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகம் அருகே பரபரப்பு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், துரோகிகளை துவம்சம் செய்ய அம்மாவின் தூய உள்ளமே வருக! பொறுமை போதும் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளரே தலைமை ஏற்க வருக! என்று அச்சடித்துள்ளனர். மேலும், பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் என்ற வாசகங்களையும் போஸ்டரில் அச்சடித்துள்ளனர். தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவை சசிகலா கைப்பற்றுவார் என்று ஒரு பேச்சு இருந்த நிலையில், ஓபிஎஸ் -இபிஎஸ் மோதலுக்கு இடையில் சசிகலா நுழைந்து இருப்பது அதிமுக வட்டாரம் டென்ஷன் உச்சத்தில் இருக்கின்றது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments