ஒருவருக்குகூட கொரோனா பாதிப்பு ஏற்படாத கிராமமா...!!

     -MMH
கொரோனா உச்சத்தில் இருக்கும் கேரள மாநிலத்தில் ஒரு கிராமத்தில் ஒருவருக்குகூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது ஆச்சர்யமளிக்க கூடிய செய்தியாக பேசப்பட்டு வருகிறது. அந்தக் கிராமம் குறித்து பார்ப்போம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலங்களில் ஒன்று கேரளா. இங்கு தினசரி பாதிப்பு 40,000-ஐ தொட்டு வருகிறது. அந்த அளவுக்கு அம்மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகிறது. ஆனால் இதே கேரளாவில் ஒரு கிராமத்தில் ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? பசுமையான இடுக்கி மாவட்டத்தில் உள்ள எடமலக்குடி என்ற பழங்குடி கிராமம் அந்தப் பெருமைக்கு சொந்தமான ஊர்.

இங்கு இருக்கும் மக்களில் ஒருவருக்குக்கூட தற்போது கொரோனா இல்லை. இதை சாத்தியப்படுத்தியதும் இந்த ஊர் மக்கள் தான். தங்களுக்காகவே சுயமாக லாக் டவுன் விதிப்பது, வெளியாட்கள் கிராமத்திற்குள் நுழைவதைத் தடுப்பது, கிராமத்தில் விளைவித்த உணவுப் பொருட்களை மட்டும் உண்பது ஆகியவற்றுடன் இங்கு தூய்மையான காற்று அதேபோல் இம்மக்களின் எளிய வாழ்க்கை முறை போன்ற காரணிகள் காரணமாக கொரோனா இவர்களை அண்டவில்லை. இது நிச்சயம் வியப்புதரக்கூடிய செய்தி தான்.

இது தொடர்பாக பேசியிருக்கும் பி கே ஜெயஸ்ரீ என்பவர், 'இந்த பஞ்சாயத்தில் இருந்து ஒரு கொரோனா பாதிப்புகூட பதிவாகவில்லை. மூணாரின் வனப்பிரிவுக்குள் அமைந்துள்ள எடமலக்குடி கிராமம் சுமார் 3,000 பேர் வசிக்கும் முதல் பழங்குடி கிராம பஞ்சாயத்து ஆகும். இந்த கிராமத்துக்கென சாலைகள் இல்லை. கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஏற்பட்ட நிலச்சரிவு இருந்த இணைப்புகளை துண்டித்துவிட்டது. இதனால் இயற்கையாகவே தனித்துவிடப்பட்டது போல் இந்த கிராமம் அமைந்துவிட்டது. கடந்த ஆண்டு தொற்றுநோய் தொடங்கியபோது, உள்ளூர் பஞ்சாயத்து ஒரு கூட்டம் கூட்டி இப்பகுதியில் தங்களுக்காகவே ஊரடங்கு போட்டுக்கொண்டனர்.

அதன்படி, வெளிநபர்கள் கிராமத்துக்குள் வராதவாறு கண்காணிக்கப்பட்டனர். அதே நேரத்தில் உள்ளூர்வாசிகள் யாரேனும் வெளியூர் சென்றால் அவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வைக்கப்பட்டனர். இதேபோல் மாஸ்க் மற்றும் சானிடைசர் போன்ற தற்காப்பு பொருட்களும் அவர்கள் மத்தியில் புழக்கத்துக்கு விடப்பட்டன.

இதுபோக இங்கு வசிக்கும் பழங்குடியினரின் சைவ உணவு மற்றும் காடுகளின் சுத்தமான ஆகிசிஜன் நிரம்பிய காற்று அவர்களை ஆரோக்கியமாகவும், கொரோனா வராமலும் வைத்திருக்க உதவியது" என்றார். இப்படி புத்திசாலித்தனமாக முன்னரே திட்டமிட்டு, அவசரகால சூழ்நிலையில் பாதுகாப்பாக இருந்தாலும், அம்மாநில சுகாதார அதிகாரிகள் இப்பகுதியில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

-சுரேந்தர்.

Comments