பக்தர்கள் இன்றி பிரதோஷ வழிபாடு!!

       -MMH

கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக கடந்த சில வாரங்களாக மத வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஆலய அலுவலர்களால் பூஜை மற்றும் மத சம்பிரதாயங்கள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக நேற்று தஞ்சை பெரிய கோவிலில் 14-வது வாரமாக பக்தர்கள் இன்றி பிரதோஷ வழிபாடு சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்த புதிய கட்டுப்பாடுகளின் படி பக்தர்கள் இன்றி நடைபெற்ற இரண்டாவது பிரதோஷம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் இன்றி அர்சகர்களால் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு அனைத்தும் இரண்டாவது முறையாக யூடியூப் மூலமாக நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

சென்னையில் அமைந்துள்ளது கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் திருக்கோயில். இது தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவ தலமாகும் . இத்திருத்தலத்தில் நேற்று மாலை நான்கு முப்பது மணிக்கு தொடங்கிய பிரதோஷ வழிபாடு மாலை ஆறு முப்பது மணிக்கு இனிதே  நிறைவுற்றது.

நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஆராதனை காட்டப்பட்டது. அதன் பின்னர்  கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் சுவாமிகள் நந்தியம்பெருமான் வாகனத்தில்  ஆலயத்தின் உள் பிரகாரத்தில் ஆலய நிர்வாகிகள்  மற்றும் அர்சகர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்தார். ஓதுவார்கள் இறைவனின் பக்திப்பாடல்களை இனிமையுடன் பாடினர்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் நேரலையாக காணொளி காட்சியாக  ஒளிபரப்பப்பட்டது பக்தர்களை மிகுந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. பக்தர்கள் அனைவரும் அவரவர் வீட்டில் இருந்தவாரே தொலைக்காட்சியில் கண்டுகளிக்க ஏதுவாக இருந்தது. இந்து சமய அறநிலையத்துறையை அனைவரும் ஏக மனதுடன் பாராட்டினர்.

சில தினங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும் சித்திரை திருவிழாவையும் இந்து சமய அறநிலையத் துறையினர் நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற புதிய முயற்சிகளால் பெரும் நோய்த்தொற்றை மற்றும் அதன் பரவலை பெருமளவில் தடுக்கலாம் என்பது எல்லாருடைய கருத்தாக உள்ளது. இது போன்ற நல்ல முயற்சிகளில் ஈடுபட்ட அரநிலை துறையினரை நாம் அனைவரும் பாராட்டுவோம்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments