நடிகர்கள் மன்சூர், மயில்சாமிக்கு போட்டி நோட்டா தான்!!

   -MMH

தமிழக அரசியலுக்கும், சினிமாவுக்குமான நெருக்கம், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என, தமிழகத்துக்கு அதிகளவிலான முதல்வர்களைத் தந்தது, தமிழக கலைத்துறைதான்.

இந்தத் தேர்தலிலும் நடிகர் கமலும், இயக்குனரும் நடிகருமான சீமானும் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளனர். இருவருடைய கட்சிகளும், ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும், சீமானின் நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தி, பரவலாக ஓட்டுகள் வாங்கியதில், தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக அடையாளம் பெற்றிருக்கிறது. ஆனால் சீமான், அவர் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில், 48 ஆயிரத்து, 597 ஓட்டுகள் மட்டுமே வாங்க முடிந்தது. அங்கு அவருக்கு மூன்றாவது இடம்தான் கிடைத்தது.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல், முதலிடத்தில் இருந்து, கடைசியில் 1,728 ஓட்டுகள் வித்தியாசத்தில், பா.ஜ., தேசிய மகளிரணி செயலர் வானதி சீனிவாசனிடம் தோற்று போனார். இவர்கள் நிலை இப்படியென்றால், 'நானும் நடிகன்தானே, எனக்கும் மக்கள் ஓட்டுப் போடுவர்' என நம்பி, தேர்தல் களத்தில் குதித்த காமெடி நடிகர்கள் மயில்சாமி, மன்சூர் அலிகானின் நிலைதான் மிகப்பெரும் காமெடியாகி விட்டது.

விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட மயில்சாமிக்கு, 1,440 ஓட்டுகள் கிடைத்தன. அங்கு நோட்டாவுக்கு, 1,563 ஓட்டுகள் பதிவாகியுள்ளன.'என்ர ஊரும் கோயம்புத்துாருதானுங்க' எனக் கூறி, கோவைக்கு வந்து,தொண்டாமுத்துாரில் மனு தாக்கல் செய்தார்,நடிகர் மன்சூர் அலிகான். 'அமைச்சர்ட்ட எவ்வளவு பணம் வாங்குனீங்க' என்று யாரோ கேட்டார்கள் என, வேட்பு மனுவை வாபஸ் பெறப்போய், அந்த முடிவையும் வாபஸ் பெற்று, போட்டியிட்ட அவருக்கு கிடைத்த ஓட்டுகள் வெறும், 428 மட்டுமே. 

அந்தத் தொகுதியில் நோட்டாவுக்குக் கூட, 1,622 ஓட்டுகள் கிடைத்துள்ளன. தமிழக மக்கள், காமெடி நடிகர்களை திரையில் மட்டுமின்றி, அரசியலிலும் காமெடியாகத்தான் பார்க்கின்றனர் போலிருக்கிறது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-I. அனஸ், V. ஹரிகிருஷ்ணன்.

Comments