சிங்கம்புணரி அருகே வேப்பிலை தடுப்பு அமைத்த கிராமம்!

 

-MMH

      சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் உள்ள துணை கிராமங்களான மதகுபட்டி மற்றும் காந்திநகரில் வேப்பிலையில் தடுப்பு வேலி அமைத்து கிராமத்தினர் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வருகின்றனர். பிரான்மலையில் பிரசித்தி பெற்ற கோவில்கள் மற்றும் ஒரு தர்காவும் உள்ளதால் பிரான்மலை சுற்றுலாதளமாக விளங்குகிறது இங்கு மதகுபட்டி, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இக்கிராமங்களில் நேற்று முதல் கொரோனாவை தடுக்க அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாக தாங்களாகவே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இக்கிராமத்தில் கொரோனா  தொற்று பரவாமல் தவிர்க்க, வியாபாரிகள், வெளியூர் நபர்கள் ஊருக்குள் வராமல் தடுக்க பாதைகளை கம்பி, மரக்கட்டை, கயிறுகள் மூலம் பாதைகளை மறித்து வேப்பிலையால் கயிறு கட்டியுள்ளனர். அவசர, அத்தியாவசியத் தேவைகளுக்காக ஊருக்கு வெளியில் செல்பவர்கள் திரும்ப வரும்போது சோப்பு போட்டு கை, கால்களை கழுவிய பிறகே ஊருக்குள் அனுமதிக்கின்றனர். இதற்காக 24 மணி நேரமும் முகப்பில் ஒருவர் கண்காணிப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரான்மலையில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பூ வியாபாரம் செய்கின்றனர். தற்போது யாரும் வெளியூர் சென்று பூ வியாபாரம் செய்து விட்டு ஊருக்கு வரக்கூடாது எனக் கட்டுப்பாடு விதித்துள்ளனர். முகக்கவசமின்றி யாரும் வீதிகளில் நடமாடக் கூடாது. 6 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும். தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் மினி சரக்கு வாகனங்கள் முகப்பு சாலையில் நிறுத்தப்படும், தேவை உள்ளவர்கள் வாங்கி கொள்ளலாம் என்பது போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இக்கிராம மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, விழிப்புணர்வுடன் செயல்படுவதால் சுகாதாரத்துறையினர் அதிகாரிகள் இவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதே போன்று கிராமங்கள் தோறும் கொரோனாவை தடுக்க அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தால், விரைவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

-அப்துல் சலாம்.

Comments