டீசல்விலை மற்றும் சாலை வரியை குறைக்க வேண்டும்!! - தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேண்டுகோள்!!
தமிழக அரசு நாளை முதல் கொண்டுவரவுள்ள புதிய கட்டுப்பாடுகளால், தனியார் பேருந்துகளுக்கு 70 சதவீதம் வருவாய்இழப்பு ஏற்படும். எனவே, டீசல்விலை மற்றும் சாலை வரியை குறைக்க வேண்டுமென தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 4,700 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 1,500 பேருந்துகள் நகரப் பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன. கரோனா பாதிப்பில் இருந்துசற்று மீண்ட பிறகு சில மாதங்களாக மீண்டும் வழக்கம்போல தனியார் பேருந்துகள் ஓடின. இதற்கிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதமாக வேகமாக அதிகரித்து வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, தற்போது 2-வது முறையாக புதிய கட்டுப்பாட்டை விதித்து, வரும் 6-ம் தேதி (நாளை) முதல் அமல்படுத்தவுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமேபயணிகள் அமர்ந்து செல்ல அனுமதிக்க வேண்டுமென கட்டுப்பாடு விதித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடுதனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளன செயலர் தர்மராஜ் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தமிழகத்தில் தற்போது, பேருந்துகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அமர்ந்து செல்ல அனுமதிக்க வேண்டுமென புதிய கட்டுபாடு விதித்துள்ளதால், எங் களுக்கு 70 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்படும். கரோனா தொற்று காலத்தில் இதுபோன்ற உத்தரவுகள் தவிர்க்க முடியாதவை. எனவே, எங்களின் இழப்பை ஈடு செய்ய 50 சதவீத சாலை வரியை ரத்து செய்ய முன்வர வேண்டும். மேலும், தனியார் பேருந்துகளுக்கான டீசல் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.அன்பழகன் கூறியதாவது:
கொரோனா வைரஸ் தடுப்பு நடவ டிக்கைகளால் சுமார் 7 மாதங்கள் ஆம்னி பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்திருந்தோம். பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளின் சேவை தொடங்கி, பிறகு படிப் படியாக உயர்ந்து பிப்ரவரி கடைசியில் 600 பேருந்துகள் வரை இயக்கப்பட்டன. இரவு ஊரடங்கு என்பதால் பகல் நேரங்களில் சுமார் 300 ஆம்னி பேருந்துகளை இயக்கி வருகிறோம். தற்போது, 50 சதவீத இருக்கையுடன் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டுமென்பதால் எங்களின் அன்றாட செலவுக்கும் வருவாய் கிடைக்காது. கடந்த ஓர் ஆண் டாக பேருந்துகள் இயங்காத காரணத்தால் வங்கிகளுக்கு சரிவர கடன் தவணை கட்ட முடியவில்லை.
எனவே, இந்த தொழிலை காப்பாற்றுவதற்காக மத்திய, மாநில அரசுகள் தொலைநோக்குடன் உதவ வேண்டும். அடுத்த 6 மாதங்களுக்கு 50 சதவீத சாலை வரியை மட்டும் வசூலிக்க வேண்டும். ஆம்னி பேருந்துகள் இயங்காத காலங்களுக்கு இன்சூரன்ஸ் பிரீமியத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-சுரேந்தர்.
Comments