விமானத்தில் ஏறும் வரை தான் கர்ப்பமாக இருப்பது தெரியாத ஒரு பெண், குழந்தையுடன் தரையிறங்கினார்!!

  -MMH

தனது வீட்டிலிருந்து விமான நிலையத்திற்குக் சென்று விமானத்தில் ஏறும் வரை தான் கர்ப்பமாக இருப்பது தெரியாத ஒரு பெண், குழந்தையுடன் தரையிறங்கினார். ஆச்சரியமா இருக்கிறதா? ஆனால் இது உண்மை.

Utah நகரில் இருந்து Honolulu சென்ற பெண்ணுக்கு நேர்ந்த திகைப்பூட்டும் அனுபவம் இது. கடந்த வாரம் விமானப் பயணத்தின்போது தான் அந்த பெண்ணுக்கு பல விஷயங்கள் தெளிவாகின.

"நான் கர்ப்பமாக இருப்பதே எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்த குழந்தை என் வயிற்றில் இருந்து தான் வந்தான்" என்று ஹவாய் பசிபிக் ஹெல்த் (Hawaii Pacific Health) பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது Mounga என்ற அந்த பெண் கூறினார். அந்த பெண் குடும்பத்துடன் ஹவாய்க்கு விடுமுறைக்குச் சென்றிருந்தபோது, 29 வார கர்ப்பமாக இருந்த மெளங்காவுக்கு தான் கர்ப்பமாக இருப்பதே தெரியவில்லை.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மெளங்கா பயணம் செய்த விமானத்தில் மருத்துவர், மருத்துவ பணியாளர்கள் என பலரும் இருந்தனர். ஹவாய் பசிபிக் சுகாதார குடும்ப நல மருத்துவர் டாக்டர் டேல் க்ளென் (Dr Dale Glenn) மற்றும் வடக்கு கன்சாஸ் நகர மருத்துவமனையைச் சேர்ந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு செவிலியர்கள் லானி பாம்பீல்ட் ((Lani Bamfield), உட்பட மேலும் சில மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் விமானத்தில் இருந்தது அதிர்ஷ்டவசமானது என்றே கூறலாம். அதனால் தான் வெறும் 29 மாத கர்ப்பமாக இருந்த பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டபோது வானில் பறந்துக் கொண்டிருந்த விமானத்திலேயே பிரசவம் பார்க்க முடிந்தது.

"விமானத்தில் மூன்று என்.ஐ.சி.யு செவிலியர்கள் மற்றும் ஒரு மருத்துவர் இருந்தனர். நான் இப்போது நலமாக இருக்கிறேன்" என்று மெளங்கா கூறினார். அடுத்த 10 வாரங்களுக்கு, குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கவேண்டும். ஹவாயில் தனக்குக் கிடைத்த மருத்துவ கவனிப்பு மிகவும் பாராட்டத்தக்கது என்று மெளங்கா என்ற திடீர் தாய் நெகிழ்கிறார்.

"இது மிகவும் வித்தியாசமான அனுபவம்,மிகவும் ஆறுதலளிக்கிறது, அனைவரும் உதவ தயாராக உள்ளனர் என்பது மிகவும் அற்புதமான விஷயம்" என்று விமானத்தில் பிரசவித்த தாய் அனைவருக்கும் நன்றி கூறுகிறார்.

-சுரேந்தர்.

Comments