செல்பி மோகம்! டிராக்டருடன் கிணற்றில் விழுந்து வாலிபர் பலி!

     -MMH

     திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த சின்ன மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சஞ்சீவி(18). இவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள ராஜேந்திரன் என்பவரது விவசாய நிலத்துக்கு சென்றுள்ளார். அப்போது மதிய உணவு அருந்துவதற்காக ராஜேந்திரன் வீட்டுக்குச் சென்ற நிலையில் இளைஞர் சஞ்சீவ், ராஜேந்திரன் வயலில் நிறுத்தி சென்ற டிராக்டரை இயக்கம் முயன்றுள்ளார். அதேபோல் டிராக்டரில் அமர்ந்து டிராக்டரை இயக்குவது போல் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து டிராக்டரை இயக்க முற்பட்ட சஞ்சீவ், தவறாக டிராக்டரை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அருகில் இருந்த 60 அடி ஆழமுள்ள கிணற்றில் பாய்ந்தது. இதனால் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சஞ்சீவ் கிணற்றுக்குள்ளேயே உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கும், அம்பலூர் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக விரைந்து சென்ற மீட்புப்படையினர் அருகில் விவசாய நிலங்களில் இருந்த மின் மோட்டார்களை பயன்படுத்தி நீரை அப்புறப்படுத்தினர். பின்னர் 4 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு  கிணற்றில் இருந்து இளைஞர் சஞ்சீவை சடலமாக மீட்டனர்.

செல்பி மோகத்தால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில் ஊரடங்கு போடப்பட்ட பின்னரும், டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்னரும் இதுபோன்ற விபத்துகள் குறைந்திருந்தன. இந்நிலையில், செல்பி மோகத்தால் டிராக்டரை இயக்கத் தெரியாமல் இயக்கி நொடிப் பொழுதில் உயிரை விட்ட வாலிபரின் செயல் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வாலிபர் கிணற்றுக்குள் விழுந்து இறப்பதற்கு முன்பு டிராக்டரில் அமர்ந்து எடுத்த செல்பியை வாட்சப் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார். உயிரை விடுவதற்கு முன்னதாக அவர் எடுத்த கடைசி புகைப்படத்தை வாலிபரின் உறவினர்களும், நண்பர்களும் பார்த்துக் கதறி அழுதது காண்போரின் நெஞ்சங்களை உலுக்கியது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் வாலிபரின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

- பாரூக்.

Comments