மத்திய அரசின் புதிய அறிவுரைகள்!!

   -MMH

நாடுமுழுவதும் 10 சதவீதத்துக்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதாக சுமார் 150 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 6 மாவட்டங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்று உள்ளன. இந்த மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தினால் 2-வது அலை பரவலை தடுத்து நிறுத்தி விடலாம் என்று மத்திய அரசு கருதுகிறது. இதுதொடர்பாக கடந்த சில தினங்களாக மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.

150 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு கொண்டு வரப்படலாம் என்று கடந்த 2 நாட்களாக தகவல்கள் வெளியானது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாவிட்டால் முன்பு போல பச்சை, சிவப்பு, மஞ்சள் என 3 மண்டலங்களாக மாவட்டங்களை பிரித்து அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்படுவதாக கூறப்பட்டது.

இந்தநிலையில் மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கொடுத்துள்ளது. அதன்படி 10 சதவீதத்துக்கும் மேல் பாதிப்பு உள்ள மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கை கொண்டு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கு பதில் கூடுதல் கட்டுப்பாடுகளை கொண்டு வந்து அதை தீவிரமாக அமல்படுத்தினால் போதும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் வேகம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை ஆய்வு செய்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுமக்களுக்கு எத்தகைய கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு தெளிவுபடுத்தி உள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் சந்தைகள், அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை உடனடியாக அமல்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதைதவிர கொரோனா பரவல் வீதத்தை கட்டுப்படுத்த சோதனைகளை தீவிரப்படுத்துமாறும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. புதிதாக கொண்டு வரும் கூடுதல் கட்டுப்பாடுகளை மே மாதம் 31-ந்தேதி வரை அமல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முக கவசம் அணிவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. பொது மக்கள் முக கவசம் அணிவதையும் தனிமனித இடைவெளியை  பின்பற்றுவதையும்  மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ராஜசேகரன், தஞ்சாவூர். 

Comments