சேலத்தில் மனைவியுடன் பைக்கில் விபத்து!! பஸ்சின் அடியில் சிக்கி கம்பியில் தொங்கி உயிர் பிழைத்த ஊழியர்!!

   -MMH

சேலம்: சேலத்தில் சாலையோரம் மனைவியுடன் பைக்கில் வந்தபோது தனியார் பஸ் மோதி, அதன் அடியில் சிக்கி கம்பியில் 1 கிலோ மீட்டர் தூரம் தொங்கியபடி தனியார் நிறுவன ஊழியர் உயிர் பிழைத்தார். சேலம் கொண்டலாம்பட்டி ஆர்.ஆர்.பேர்லேண்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (43), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சத்யா (40), குள்ளமுடையானூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். இவர்கள் இருவரும் நேற்று  வீட்டில் இருந்து பைக்கில், சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் சென்றனர். திருவாகவுண்டனூர் பை-பாஸ் திருப்பத்தில் சென்றபோது, மழையின் காரணமாக ரோட்டில் தண்ணீர் தேங்கியிருந்துள்ளது. அந்த பகுதியை கடந்தபோது, பின்னால் கரூரில்  இருந்து சேலம் வந்த தனியார் பஸ் கடந்தது.

பாதியளவு பஸ் முன்னே சென்றநிலையில், பின்பகுதி கடந்தபோது பைக்கின் மீது லேசாக உரசிச் சென்றது. இதில், பைக்கில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர்.  வலது புறம் சரிந்த கார்த்திக், பஸ்சின் அடியில் சிக்கினார். அதிர்ஷ்டவசமாக சக்கரத்தில் சிக்காமல், நடுப்பகுதியில் இரண்டு சக்கரத்திற்கு இணைப்பாக இருக்கும் கம்பியில், கார்த்திக் தொங்கிக் கொண்டார். இதை அறியாத டிரைவர், பஸ்சை  தொடர்ந்து ஓட்டிச் சென்றார். சத்யா  கூச்சலிடவே, பின்னால் வந்த வாகன ஓட்டிகள் பஸ்சை விரட்டி சென்றனர். சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் கடந்தநிலையில் 3 ரோடு பகுதியில் பஸ்சை நிறுத்தி விவரத்தை கூறினர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் கரூரை சேர்ந்த வெங்கடேஷ், பஸ்சை அங்கேயே விட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். பின்னர், பஸ்சின் அடியில் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த கார்த்திக்கை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

-குமார், ஊத்துக்குளி.

Comments