கோவை ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து செய்யப்பட்டது..!!

  -MMH

கோவை மாவட்டம் பன்னிமடையைச் சேர்ந்த சரஸ்வதி அம்மாளுக்கு (90) சொந்தமான கோவை கணபதியில் உள்ள நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 1983ல் கையகப்படுத்தியது. 

இதற்காக, ரூ.69 லட்சம் இழப்பீடு வழங்க, நீதிமன்றம் உத்தரவிட்டு, பல ஆண்டுகளாகியும், வீட்டு வசதி வாரியம் இழப்பீடு வழங்காமல் காலதாமதம் செய்தது.

இதனால் சரஸ்வதி அம்மாள் சார்பில், கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதனை விசாரித்த நீதிமன்றம், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்யவும், கோவை வீட்டு வசதி வாரிய அலுவலகத்தை பூட்டி, 'சீல்' வைக்கவும், கடந்த 21ம் தேதி உத்தரவிட்டது.

அதேபோல், ஆவாரம் பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், சரோஜினி ஆகியோருக்கும், ரூ. 59 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டும், பணம் செலுத்தப்படவில்லை. 

இதனால், கலெக்டர் அலுவலக பொருட்கள் ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த இரண்டு உத்தரவையடுத்து கோவை ஆட்சியர், சென்னை வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி இழப்பீட்டு தொகையை, நீதிமன்றத்தில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கோவை வீட்டு வசதி வாரிய அதிகாரிகள், நில உரிமையாளர்கள் சரஸ்வதி அம்மாள், வெங்கடேஷ், சரோஜினி ஆகியோருக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகை மொத்தம், 1.28 கோடி ரூபாயை, காசோலையாக நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைத்தனர். 

இதனால், கோவை கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்வதற்கான உத்தரவை, நீதிபதி ரத்து செய்தார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-I. அனஸ், V. ஹரிகிருஷ்ணன்.

Comments