மகனுக்கு மருந்து வாங்க 300 கி.மீ. சைக்கிள் பயணம்! பாசக்கார தந்தையின் நெகிழ்ச்சிச் செயல்!

-MMH

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து இல்லாததால் மகனுக்கு மருந்து வாங்குவதற்காக தந்தை ஒருவர் 300 கி.மீ தூரம் சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூரு அருகே நரசிபூர் தாலுகா, கனிகன கோப்பலு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த், கட்டிடத் தொழிலாளி. இவர் போதிய வருமானமில்லாமல் வறுமையில் வாடி வந்தநிலையில், இவரது 10 வயது மகன் நரம்பு சம்பந்தமான நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

மைசூரூவில் சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவமனைக்கு மகனை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும், ஒரு நாள் கூட தவறவிடாமல் மாத்திரை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்து இருந்தனர்.

சிறுவன் 18 வயதை அடைவதற்கு முன்னர் மருந்துகள் நிறுத்தப்பட்டால் வலிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் மகனை மருத்துவமனைக்கு பெங்களூரு அழைத்துச் செல்லமுடியாமல் ஆனந்த் தவித்தார். நாள் தவறாமல் மகனுக்கு மருந்து கொடுக்க வேண்டிய சூழலில் வேறு வழியின்றி பெங்களூருக்கு சைக்கிளில் செல்ல ஆனந்த் முடிவெடுத்தார். கனகபுரா பாதை வழியாக பயணம் செய்தார். ஒருநாள் கூட சிகிச்சை தவறாத வகையில் மகனுக்கு மருந்து வாங்கி வருவதற்காக 2 நாட்கள் பயணம் செய்து பெங்களூரு சென்றடைந்தார் ஆனந்த். கிராமத்தில் இருந்து சைக்கிளிலேயே ஆனந்த் வந்திருப்பதை அறிந்து அந்த மருத்துவமனை மருத்துவர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயினர்.

ஆனந்த்தின் முயற்சியை எண்ணி நெகிழ்ந்து போன அவர்கள், ஆனந்தின் மகனுக்கு தேவையான மருந்து மற்றும் செலவுக்காக ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்தனுப்பினர். அதை பெற்றுக்கொண்டு ஆனந்த் அடுத்த இரு நாட்களில் வீடு வந்து சேர்ந்தார். மகனுக்கு மருந்து வாங்கி வருவதற்காக அவர் 300 கி.மீ பயணம் செய்துள்ளார்.

இதுகுறித்து ஆனந்த் கூறுகையில், 'எனது மகன் ஒரு நாள் கூட மருந்து சாப்பிடாமல் இருக்கக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். எனவே, தேவையான மருந்தை வாங்குவதற்காக மைசூரு சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் அலைந்து பார்த்து விட்டேன். ஆனால் தேவையான மருந்து கிடைக்கவில்லை. இதனால் பெங்களூரு சென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சைக்கிளில் சென்று வாங்கி வர முடிவு செய்து சென்றேன். அதன்படி வாங்கி வந்தேன். கஷ்டப்பட்டாலும் எனது மகனின் உடல்நலத்தை எண்ணிப் பயணம் செய்தேன். மருந்து வாங்கியதில் எனக்கு மகிழ்ச்சி' எனக் கூறினார்.

-பாரூக்.

Comments