கோவையில் பெற்றோரை இழந்துள்ள 91 குழந்தைகள்..!!

 

-MMH

        கோவையில் கொரோனாவால் இதுவரை 91 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாகவும், அதில் 61 குழந்தைகள் இழப்பீட்டுத் தொகைக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார். கொரோனா இரண்டாம் கட்ட அலையில் இந்தியாவிலேயே அதிகளவில் கோவை மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தந்தை, தாயை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு அரசு இழப்பீடு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றால் பெற்றோர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குழந்தைகளுக்கு பாதுகாவலர் இல்லையெனில் , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலமாக 3 காப்பகங்கள் கோவையில் தேர்வு செய்யப்பட்டு, தற்காலிகமாக அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

               மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

குழந்தைகளுக்கு தேவையான உணவு , தங்குமிடம் அரசின் சார்பாக ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படி கொரொனாவால் சிகிச்சை பெற்று வருபவர்களின் குழந்தைகள், 36 காப்பகங்களில் 577 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 850 குடும்பங்களை ஆய்வு செய்ததில், 61 குடும்பங்களில் 91 குழந்தைகள் தாய் , அல்லது தந்தையை இழந்துள்ளனர். இரண்டு குழந்தைகள் மட்டும் பெற்றோர் இருவரையும் இழந்துள்ளனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்பு, உணவு , நிரந்தர தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு தாய் அல்லது தந்தையை இழந்தால் மூன்று லட்ச ரூபாயும், இருவரையும் இழந்தால் ஐந்து லட்ச ரூபாயும் இழப்பீடாக வழங்க இருக்கின்றனர். இதில் 51 குழந்தைகள் நிதியுதவி கேட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பித்துள்ளனர். பாதுகாவலரின் பொறுப்பில் இருக்கும் குழந்தைகள் 20 பேருக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக நான்கு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குழந்தைகளின் பெற்றோர்கள் இருவர் அல்லது ஒருவர் இறந்தால், அவர்களின் பாதுகாப்புக்கு யாரும் இல்லையெனில், 1098 என்ற எண்ணிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவ்வலர், மாவட்ட குழந்தைகள் நலக்குழுவை தொடர்பு கொண்டால் அனைத்து உதவிகளையும், அரசின் சார்பில் செய்து தருவதாக மாவட்ட பாதுகாப்பு அலுவலர் ஆர் சுந்தர் தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-I. அனஸ். V. ஹரிகிருஷ்ணன்.

Comments