ஊரடங்கால் மதுக்கடைகள் அடைப்பு போதைக்காக ஓம வாட்டரில் தலைவலி மாத்திரையை கலந்து குடிக்கும் விபரீதம்.!!

 

-MMH 

        ஊரடங்கால் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் போதைக்காக ஓம வாட்டரில் தலைவலி மாத்திரை கலந்து மது பிரியர்கள் குடிப்பதால் உடல் நலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் பூகோள ரீதியாக தமிழகமும், புதுச்சேரியும் பின்னிப் பிணைந்துள்ளது என்பதால் மது பிரியர்கள் படையெடுப்பதை தடுக்க இரு மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. புதுச்சேரியில் சாராயக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இதனால் மது கிடைக்காமல் மது பிரியர்களை போதை பாடாய்படுத்தியது. இதற்காக சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கிறார்கள். அதுவும் கிடைக்காமல் போனால் டியூப் பஞ்சர் ஒட்ட பயன்படுத்தப்படும் சொலுசனை முகர்ந்து பார்ப்பது, சோடாவில் காய்ச்சல் மாத்திரையை கலந்து குடிப்பது, குழந்தைகளுக்கான இருமல் டானிக்கை வாங்கி குடிப்பது, சானிடைசரில் தண்ணீர் கலந்து குடிப்பது என விபரீத முயற்சிகளில் இறங்கி வருகிறார்கள்.

இந்த வரிசையில் புதுவிதமாக போதைக்காக தலைவலி மாத்திரையை ஓம வாட்டரில் கலந்து குடிக்கும் வினோதம் புதுச்சேரி அருகே நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:

திருக்கனூர், காட்டேரிக்குப்பம் போலீஸ் சரக பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை தற்போது கடும் ஜோராக நடப்பதாகத்தெரிகிறது. அதாவது 30 ரூபாய்க்கு விற்ற 180 மில்லி அளவு கொண்ட சாராயம், தற்போது ரூ.200 வரை விற்பனை, இதுதவிர ரூ.130-க்கு விற்ற குவாட்டர் பிராந்தி ரூ.350 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

விலை அதிகம் என்ற போதிலும் போதைக்காக மது பிரியர்கள் அதை வாங்கி குடிக்கின்றனர். மதுபானங்களின் விலை அதிகரித்துள்ளதால் மதுபழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதை விட முடியாமல் ஆபத்தான வழியில் இறங்கியுள்ளனர்.

அதாவது போதை ஏற வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கப்படும் ஓம வாட்டரை வாங்கி, அதில் தலைவலி மாத்திரைகளை போட்டு கலந்து குடிக்கிறார்கள். இப்படி செய்வதால் போதை ஏற்படுவதாக கூறப்படுகிறது. சிலர் குளிர்பான பாட்டில்களில் தலைவலி மாத்திரையை போட்டு குடிக்கிறார்கள். இதனால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதோடு, உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

கடந்த ஆண்டு இதுபோன்ற நிலை ஏற்பட்ட போது மதுபானத்தின் மீது கொரோனா வரி விதிக்கப்பட்டு மதுபான கடைகள் திறக்கப்பட்டது. அதேபோன்று தற்போது கொரோனா வரியை கூட்டி சிறிது நேரமாவது மதுக்கடையை திறக்க வேண்டும் என்பது மதுபிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

-வேல்முருகன் சென்னை.

Comments