தஞ்சை காய்கறி மார்க்கெட் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றம்!!

 

-MMH

   உலகம் முழுவதும் கொரானா கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில்  ஒவ்வொரு மாநில அரசும் அதை சமாளிக்க இயலாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்திலும் கடந்த 6ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த சூழ்நிலையில்  பல்வேறு காய்கறி மற்றும் வணிக வளாகங்கள்  எப்பொழுதும் செயல்படும் இடங்களில் இருந்து மாற்றப்பட்டு காற்றோட்டமுள்ள பேருந்து நிலையம் போன்ற இடங்களில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தஞ்சையிலுள்ள பெரிய காய்கறி மார்க்கெட் ஆன காமராஜர் காய்கறி வணிக வளாகம் தற்போது புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டு அங்கு மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது. அங்கிருந்து சில்லரை வியாபாரிகள்   காய்கறிகள் மற்றும் பழங்கள் கொள்முதல் செய்து  அரசு அனுமதி பெற்ற வாகனங்களில் வீதிகள் தோறும்  விற்பனை செய்து வருகின்றனர். புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தற்காலிக காய்கறி சந்தையானது நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கமான இடத்தில் செயல்படும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு பிரதான வாயில் மட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரதான வாயிலின் அருகே காவல்துறையினர்  சோதனைச் சாவடி அமைத்து அந்த வழியே செல்வோரிடம் விசாரணை நடத்தி பின்னரே அனுமதிக்கின்றனர். காய்கறி வியாபாரிகளிடம்  இதுகுறித்து பேசும் பொழுது வியாபாரம் சரியாக நடைபெறுவதில்லை என்றும்,  காய்கறி சந்தை அடிக்கடி இடம் மாறுவதால்    மக்களும் குழப்பம் அடைந்து சரியாக காய்கறி வாங்குவது இல்லை என்று கூறினர்.

கிராமப்புறங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதாலும் பெரும்பாலான உணவகங்களும் மூடப்பட்டு இருப்பதனாலும் வியாபாரம் மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். காவல்துறையினரின் கடும் கட்டுப்பாடு காரணமாக சில்லரை வியாபாரிகளும் பொதுமக்களும் அவ்வளவாக மார்க்கெட்டுக்கு வருவதில்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக 

-V.ராஜசேகரன் தஞ்சாவூர்

Comments