சலூன், தேனீர் கடைகளுக்கு அனுமதி! சு.ஆ. பொன்னுசாமி கோரிக்கை!!

      -MMH

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் தேனீர், சலூன் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனோ நோய் தொற்று இரண்டாவது அலையில் இருந்து மக்களை காக்க தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கில் வரும் ஜூன் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்காக அறிவித்துள்ள தமிழக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்று நன்றி தெரிவித்து கொள்கிறது.

மேலும் இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் மளிகை, காய்கறி, பழங்கள், மீன், இறைச்சி (மொத்த வணிகம்) பூ, காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் மற்றும் ஹார்டுவேர், மிதிவண்டி, இருசக்கர வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் பழுது பார்க்கும் கடைகளையும், இ.பாஸ் அனுமதியுடன் ஆட்டோக்களும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டு உள்ளது. 

ஆனால் தேனீர், சலூன் கடைகளை திறக்க அனுமதி மறுத்திருப்பது ஒரு கண்ணில் வெண்ணை மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு  என்கிற நிலைப்பாட்டில் தமிழக அரசு செயல்படுவதாக தெரிகிறது. ஏற்கனவே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாறி, மாறி அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கில் அனைத்து சிறு, குறு தொழில்களும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேனீர் மற்றும் சலூன் கடைகளை மட்டும் தொடர்ந்து திறக்க அனுமதி மறுத்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடனும் பாரபட்சத்தோடும் தமிழக அரசு நடந்து கொள்வது ஏற்புடையதல்ல.

ஏற்கனவே கடைகள் மூடப்பட்டிருந்த காலத்தில் கடை வாடகை, தொழிலாளர்களுக்கான சம்பளம், மூடப்பட்டிருந்த கடைகளுக்கான தண்ணீர் வரி, மின்சார கட்டணம் என செலவினங்கள் தேனீர், சலூன் கடை உரிமையாளர்களின் கழுத்தை நெறித்து வருகிறது. இந்த சூழலில் மேலும் அவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் கடைகளை திறக்க அனுமதி மறுப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும். எனவே தற்போதைய சூழலில் அவர்களின் வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் தேனீர், சலூன் கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதியளித்து தேனீர், சலூன் கடை உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க உத்தரவிடுமாறு  தமிழக முதல்வரை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத்தலைவர் சு.ஆ.பொன்னுசாமி குறிப்பிட்டுள்ளார்.

- ஊடகவியலாளன், ஆர்.கே.பூபதி.

Comments