சிங்கம்புணரியில் இடி விழுந்ததில் பற்றி எரிந்த தென்னை மரம்! பொதுமக்கள் அச்சம்!

 

-MMH

 

நேற்று மாலை முதலே சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதியில் கருமேகம் சூழ்ந்து மழை பொழிவதற்கு ஏற்ற சூழல் நிலவியது. இந்நிலையில் மாலை 6 மணியளவில் திடீரென்று இடியும் மின்னலும் ஏற்பட்டது. அப்போது ஒரு பலத்த இடிவிழுந்து, அதன் பலத்த ஓசை சிங்கம்புணரி நகர் முழுவதும் பயங்கரமாக எதிரொலித்தது.

அந்த இடி, அம்பேத்கர் நகரில் சாலை ஓரமாக இருந்த ஒரு பச்சை தென்னைமரத்தில் விழுந்ததால் அந்தத் தென்னை மரம் மளமளவென தீப்பற்றி எரியத்தொடங்கியது.

மரம் தீப்பற்றி எரியும் போது, காற்றும் வேகமாக வீசத்தொடங்கியதால், தீ மளமளவென வேகமாக எரிந்து நெருப்புப் பிழம்புகள் கீழே விழத்தொடங்கின. அப்போது தென்னைமரத்தின் கீழே, சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகன உரிமையாளர் விரைந்து வந்து இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தினார்.

பலத்த இடியின் போது தென்னைமரத்தின் அருகில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. உடனே, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் சிங்கம்புணரி தீயணைப்பு நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையிலான தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மேலும், இடியின் காரணமாக சுற்றுப்புற வீடுகளிலிருந்த சுமார் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் பழுதடைந்துள்ளன. பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் தாமதமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

இதனிடையே தீப்பற்றி எரிந்த தென்னை மரம் இன்று காலை வெட்டி வீழ்த்தப்பட்டது. சிங்கம்புனரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டால், உடனடியாக,

9445086242

04577242225

04577242699 என்ற 3 எண்களில் சிங்கம்புணரி தீயணைப்புத் துறையினரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ராயல் ஹமீது & அப்துல் சலாம்.

Comments