சர்ச்சையில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம்! ஊழியர்கள் மீது முன்னாள் மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டு!

-MMH

      தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக ஊழியர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக, முன்னாள் கல்லூரி மாணவிகள் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர், வல்லம் பகுதியில் அமைந்துள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழக ஊழியர்கள் சிலர் மீது, அவர்களால் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் சிலர் குற்றச்சாட்டுகள் கூறியுள்ளனர். பாலியல் தொந்தரவு செய்த நபர்களின் பெயர்களையும், எந்த வகையில் பாலியல் தொந்தரவு செய்தனர் என்பதையும், பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இப்பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த வரதராஜன் என்பவர் தன்னிடம் ‘முறைகேடாக’ நடந்து கொண்டதாகப் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “எனக்கு ஆண் நண்பர் ஒருவர் இருக்கிறார் என்பது பேராசிரியர் வரதராஜனுக்குத் தெரியும். இந்த விஷயத்தை எனது பெற்றோரிடம் கூறிவிடுவதாகக் கூறி என்னை மிரட்டினார். மேலும், அடிக்கடி எனக்கு ஃபோன் செய்து ஆசிரியர்கள் அறைக்கு வரவழைத்தார்” என்று தெரிவித்துள்ளார்.

மாணவி 3ஆவது ஆண்டு படித்தபோது, புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஆந்திராவைச் சேர்ந்த ஊழியர், அவரை தேர்வுக் கூடத்தில் காக்க வைத்து, ஏனைய மற்ற மாணவ, மாணவியர் அனைவரும் சென்ற பின்னர், அவரிடம் சில்மிஷம் செய்ததாகவும், மாணவியின் வினாத்தாளில் ஆசிரியர் தனது மொபைல் எண்ணை எழுதினார் என்றும் பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்துள்ளார்.

இந்த ஆதாரத்தை எடுத்துக் கொண்டு, நானும் எனது தோழியும், டீனிடம் புகார் செய்தோம். அதற்கு அவர் ‘இது பிராமண கல்வி நிறுவனம். நாம் சனாதன தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நாம் அவரைத் தண்டிக்கக் கூடாது’ எனக்கூறி மறுத்துவிட்டார் எனப்பதிவிட்டுள்ளார். இதேபோல, 5 ஆண்டுகளுக்கு முன்பு இப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற மாணவி அவர், தனது சமூக ஊடகத்தில் பல்கலைக் கழக ஊழியர் நடராஜன் என்பவர் ஒருநாள் இரவு 10 மணியளவில் திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்குத் தன்னை காரில் அழைத்து வரும்போது தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், பாலியல் தொந்தரவு செய்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

அவரது மனைவி வெளியூர் சென்றிருப்பதாகவும், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதாகவும் கூறி, தன்னை அவரது வீட்டில் அன்றிரவு தங்குமாறு வற்புறுத்தியதாகவும் அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், தன்னை ‘தொடக்கூடாது’ என அவரை எச்சரித்ததோடு, அதன் பின்னர் பயந்துபோய் தனது பெற்றோரை தொலைபேசியில் அழைத்தபோது, தனது பெற்றோர் அச்சமயத்தில் அழைப்பை ஏற்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வந்தடைந்ததும் காரிலிருந்து ‘தப்பித்தேன்…பிழைத்தேன்’ என, உள்ளே ஓடிச் சென்றுவிட்டதாகவும், நடந்த சம்பவங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டு, அன்று இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய அழுதுகொண்டே இருந்ததாகவும், அப்பெண் கூறியுள்ளார்.

இதுபற்றி சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தினரிடம், தான் புகார் செய்ததாகவும், ஆனால் அவர்கள் ‘இரவு 10 மணிக்கு மேல் வந்தது உன்னுடைய தவறு. அவர் உன்னுடைய உறவினர். எனவே உனது பெற்றோரிடம் கூறி, இப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் புகார் செய்யாதே’ எனக் கூறிவிட்டதாகவும், பாதிக்கப்பட்ட மாணவி பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், குற்றச்சாட்டுக்குள்ளான பேராசிரியர் வரதராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்திலிருந்து விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவிகளின் இப்பாலியல் குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் PSBB பள்ளிக்கூடத்தில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் ஊடகங்களில் பேசுபொருளாகி வரும் நிலையில், தஞ்சையில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திலும் அதே போன்ற நிகழ்வுகள் நடந்து, அவை சமூக வலைத்தளங்களில் வெளிவருவது பரபரப்பாகியுள்ளது.

-ராயல் ஹமீது.

Comments