யானைகளின் பங்களிப்பை அறிய சிறப்பு பூங்கா!!!

 

-MMH

      சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகள் பங்களிப்பு குறித்து அறிய சிறப்பு பூங்கா மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் இயற்கை சமநிலை மாறுபடாதிருக்க யானை உள்ளிட்ட வனவிலங்குகளை பாதுகாப்பது அவசியம்.

தற்போது காடுகளை பாதுகாக்க தவறியதால் வனவிலங்குகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. எனவே காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளின் பங்களிப்பு குறித்து பொதுமக்களுக்கு விளக்க சிறப்பு பூங்கா ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து கோவை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் உத்தரவின்பேரில், மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ் மேற்பார்வையில் உதவி வன பாதுகாவலர்கள் செந்தில்குமார், தினேஷ் குமார் மற்றும் வனச்சரக அதிகாரி பழனிராஜா ஆகியோர் மேட்டுப் பாளையம் -கோத்தகிரி ரோடு வன சோதனைச்சாவடி அருகில் இருக்கும் அரசு மரக்கிடங்கு வளாகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகள் பங்களிப்பை என்பதை விளக்கும் சிறப்பு பூங்கா ஏற்படுத்தி வருகிறார்கள்.

இது பற்றி வனச்சரக அதிகாரி பழனிராஜா கூறியதாவது: 

யானைகளின் குணாதிசயங்கள், உயிர்ச்சூழலில் யானையின் முக்கியத் துவம் ஆகியவை பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. யானைக்கு களிறு, பிடி, கரி, வேழம் உள்பட 30-க்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன. இதில் வேழம் என்றால் கரும்பையும், மூங்கிலையும் விரும்பி தின்னும் விலங்கு என்று பொருள்.

எனவே இந்த பூங்காவுக்கு வேழம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இங்கு பல்வேறு வகையான யானைகளின் சுவர் ஓவியங்கள் தத்ரூப மாக வரையப்பட்டு உள்ளன. அதில் யானையின் பெயர், இனங்களின் வாழ்விடம், வாழ்ந்த காலம் உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக தொகுக்கப்பட்டு, காட்சிப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

யானைகளை பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக, விழிப்புணர்வு மையம் மற்றும் திறந்தவெளி விளக்க பூங்கா அமைக்கப் பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் யானைகள் குறித்து சேகரிக்கப்பட்ட புகைப்படங்கள் வைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இங்கு சிறுவர் பூங்கா, வண்ணத்துப்பூச்சி பூங்கா, நுழைவு வாயிலில் பெரிய அளவில் யானையின் சிற்பங்கள் வைக்கப்படும்.

தற்போது 50 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. பணிகள் முடிந்ததும் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும். இங்கு வரும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்தும், யானையின் உயரம், எடை அதை எவ்வாறு கணக்கிடுவது என்பது குறித்தும் கேள்வி கேட்டு, தேர்வு நடத்தி பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப் கோவை.

Comments