வாயுப் பிரச்சினை! உண்மைக் காரணங்கள் என்ன?

-MMH

     வயிற்றுத் தொந்தரவுகள் வாயுப் பிரச்சினை ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. இந்தப் பிரச்சினை இருக்கும் பலருக்கும் சில உணவுப்பொருள்கள் சார்ந்து ஒவ்வாமை இருக்கலாம். செரிக்க முடியாத நிலை ஏற்படலாம். அதனால் வயிறு தொடர்பான தொந்தரவுகள் ஏற்படலாம் (Gluten intolerance/ lactose intolerance).

சிலருக்குக் குடல், கணையம், கல்லீரல் பிரச்சினைகளால் செரிமானக் குறைபாடுகள் ஏற்படலாம். அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம் (indigestion). சிலருக்குச் செரித்த உணவு முறையாக உட்கிரகிக்கப்படாத பிரச்சினை ஏற்படலாம் (Malabsorption syndrome). சிலருக்குக் குடலில் நீண்ட காலத் தொற்று இருக்கலாம் (Chronic amoebiasis). குடல் புழுக்களின் பாதிப்பு இருக்கலாம் (Intestinal worm infestation). மன அழுத்தம், கவலை, பீதி ஆகியவற்றால் (Irritable bowel syndrome (IBS) சிலருக்குக் குடல் பாதிப்புகள் ஏற்படலாம்.

தொந்தரவு எதுவென்றாலும் அவற்றுக்கு இவர்கள் வைத்திருக்கும் ஒரே பெயர் வாயுப் பிரச்சினை. சிலர் இந்த வாயுவை முழுமையாகப் போக்கிவிடுகிறேன், வயிற்றைச் சுத்தம் செய்துவிடுகிறேன் என்று ஏதோ வீட்டைச் சுத்தம் செய்வதுபோல பேதி மருந்தைப் போட்டுக்கொண்டு 24 மணி நேரமும் கழிப்பறையில் இருப்பார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் வாந்தி எடுத்துக் குடலைச் சுத்தம்செய்ய முயல்வார்கள்.

வாயுவுக்கான மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் என்ன ஆகும்? வாயு/அல்சர் பாதிப்புகளுக்காக அடிக்கடி குடிக்கும் ரோஸ் கலர் மருந்தில் சோடியம் அதிகமாக இருக்கும். அது உயர் ரத்த அழுத்தம், இதய நோயாளிகளைப் பாதிக்கும். அதிலுள்ள அலுமினியம் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்குச் சிரமம் ஏற்படுத்தும். மலச்சிக்கல், பேதித் தொந்தரவுகளையும் ஏற்படுத்தலாம்.

இவர்கள் சாப்பாட்டுக்கு முன்பு போட்டுக்கொள்ளும் பான் மருந்துகளை (பான்டோபிரஸோல்) தொடர்ந்து பயன்படுத்துவதால், அவை சிறுநீரகத்தைப் பாதிக்கத் தொடங்கும். இது சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட வழிவகுக்கும்.

ஆகவே சில தொந்தரவுகளை வாயுப் பிரச்சினை என்று சொல்லாமல், குடும்ப மருத்துவரின் உதவியுடன், குடல் ஜீரண மண்டலச் சிறப்பு மருத்துவரை அணுகி என்ன நோய்/பாதிப்பு என்பதைக் கண்டறியுங்கள். அந்தப் பாதிப்புக்குப் பெரும்பாலும் நாம்தான் காரணமாக இருப்போம். அதற்குச் சிகிச்சை செய்து சீராக்கிக்கொள்ளுங்கள். வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடத் தேவையில்லை.

-ராயல் ஹமீது.

Comments