எது தேசத்துரோகம்? உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! பத்திரிகையாளர்கள் வரவேற்பு!

 

   -MMH

அரசின்மீதான விமர்சனம் தேசத்துரோகம் ஆகாது என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இந்தியா முழுதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

2020 பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற டெல்லி கலவரங்கள் தொடர்பாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் ஒரு விவாத நிகழ்ச்சியில் விமர்சித்துப் பேசியதாகக் கூறி, மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டது. மார்ச் 30-ம் தேதியன்று யூ டியூப் சேனல் ஒன்றில் பேசிய வினோத் துவா, "பயங்கரவாத தாக்குதல்களையும், மரணங்களையும் வாக்கு வங்கிக்காகப் பயன்படுத்துகிறார் பிரதமர்'' என்று குற்றஞ்சாட்டினார்.


இதையடுத்து, பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் அஜய் ஷ்யாம் ஹிமாச்சல பிரதேசம் ஷிம்லா மாவட்டக் காவல்துறையில் வினோத் துவா மீது புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அவர்மீது பல்வேறு பிரிவுகளில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டன. இதுமட்டுமல்லாமல் வினோத் துவா மீது ஹிமாச்சல் பிரதேச காவல்துறை தேசத்துரோக வழக்கும் பதிவு செய்தது. இதை எதிர்த்து வினோத் துவா உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். 

இதைத் தொடர்ந்து, வினோத் துவாவைக் கைது செய்யத் தடை விதித்ததோடு, அவரை வீட்டில் மட்டுமே வைத்து விசாரணை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த அக்டோபர் மாதம் ஒத்தி வைக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியாகியிருக்கிறது.

வினோத் துவா மீது ஹிமாச்சலபிரதேச காவல்துறையினர் பதிவு செய்த தேசத்துரோக வழக்கு உள்பட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். யு.யு.லலித், வினீத் ஶ்ரீனிவாசன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, 1962-ம் ஆண்டு கேதார்நாத் சிங் என்ற பத்திரிகையாளர், பீகார் அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் போட்டிருந்த வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பைச் சுட்டிக் காட்டி, வினோத் துவா மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.

கேதார்நாத் சிங் வழக்கின் தீர்ப்பில், "தேசத்துக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விமர்சனங்கள், வன்முறைக்கு ஆதரவான கருத்துகள் ஆகியவைதாம் தேசத்துரோக சட்டத்தின் கீழ் வரும். அரசுக்கு எதிரான விமர்சனங்கள் எதுவும் தேசத் துரோக சட்டத்தின் கீழ் வராது'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை தற்போது சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்ற அமர்வு, "கேதார்நாத் சிங் வழக்கின் தீர்ப்பு அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பொருந்தும்'' என்றும் தெரிவித்திருக்கிறது.

இந்த வழக்கில் வினோத் துவா வைத்த மற்றொரு கோரிக்கையை நிராகரித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். "உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட பத்திரிகையாளர்கள்மீது, இந்தக் குழு ஒப்புதல் அளித்தால் மட்டுமே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும்'' என்பதுதான் வினோத் துவாவின் மற்றொரு கோரிக்கை.

மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் கேதார்நாத் சிங் வழக்கைச் சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர்.

- பாரூக்.

Comments