கோவையில் போலி மருந்து சீட்டு தயாரித்து போதை மாத்திரை வாங்க முயற்சி! இளைஞர்கள் கைது!

 

-MMH

     கோவை மாவட்டத்தில் சமீப காலமாக போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களைக்  குறி வைத்து புதிய புதிய வகையிலான போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவதும், மாத்திரைகளை கரைத்து ஊசிகள் மூலமாக செலுத்துவதும் அதிகரித்து வருகிறது.

அண்மையில் உக்கடம் புல்லுக்காடு பகுதியில் இளைஞர்கள் கூட்டமாக மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் போதைக்காக செலுத்தும் வீடியோ காட்சிகள் வைரலாகின. இதையடுத்து காவல் துறையினர் போதைப்பொருட்கள் புழக்கத்தைக்  கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களையும், பயன்படுத்துபவர்களையும் காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர். போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் மருந்துக் கடைகளில் இருந்து வாங்கப்படுவதால், அம்மாத்திரைகளை மருந்துச்சீட்டு இன்றி விநியோகம் செய்யக்கூடாது என்று  மருந்துக் கடைகளுக்கும், மருந்தாளர்களுக்கும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் மருந்துக்கடையில் போலிச்சீட்டைக்  கொடுத்து,  மாத்திரைகளை வாங்க முயன்ற இரண்டு பேரை கடை வீதி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த விஜயரங்கன் என்பவர், ஒப்பணக்கார வீதி பகுதியில் மருந்துக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முகமது ரசூல் (22), சக்திவேல் (23) ஆகியோர் மருந்துக் கடைக்கு வந்துள்ளனர். அப்போது தனியார் மருத்துவமனையின் மருந்து பரிந்துரைச்  சீட்டினைக் காட்டி, குறிப்பிட்ட இரண்டு மாத்திரைகளைக்  கேட்டுள்ளனர். போதைக்காக அந்த மாத்திரைகள் பயன்படுத்தப்படுவதால், மருந்து கடை உரிமையாளர் விஜயரங்கனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விஜயரங்கன் அந்த மருத்துவமனையை தொடர்புகொண்டு விசாரித்த போது, ராஜப்பன் என்பவருக்கு மருந்து சீட்டு வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து விஜயரங்கன் அவர்களிடம் பெயர் மற்றும் முகவரிகளைக்  கேட்ட போது, அவர்கள் விவரங்களைக் கூற மறுத்துள்ளனர். மேலும் போலியாக மருந்துச்சீட்டினை தயார் செய்து இருப்பதும் மருந்துக்கடை உரிமையாளர் விஜயரங்கனுக்குத்  தெரியவந்தது. இதுகுறித்து விஜயரங்கன் கேட்டபோது, இளைஞர்கள் இருவரும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து மருந்துக்கடை உரிமையாளர் விஜயரங்கன் கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதன் பேரில் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், என்.ஹெச். சாலையைச் சேர்ந்த முகமது ரசூல் மற்றும் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் முகமது ரசூல் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

-சோலை. ஜெய்க்குமார்/Ln. இந்திராதேவி முருகேசன்.

Comments