கொரோனா வைரஸிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

  -MMH

    இதுவரை கொரோனாவால் பலியான குழந்தைகளை ஆய்வுசெய்ததில் ரத்தசோகை, உடற்பருமன் உள்ளவர்கள், நோய்த் தடுப்பாற்றல் இல்லாதவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், ஆஸ்துமா, சிறுவயது நீரிழிவு (Childhood diabetes), பிறவி இதயக் கோளாறு, பிறவி சிறுநீரகக் கோளாறு, புற்றுநோய் உள்ளவர்கள்தாம் கொரோனா ஆபத்து மிகுந்தவர்களாக இருக்கின்றனர். 

ஆனால், இவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் மிகவும் குறைவு. இன்னும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை முழுமையாக முடிவடையவில்லை.

ஆகையால், குழந்தைகளை அனைத்து தடுப்பு நடவடிகைகளையும் கடைபிடிக்க பழக்கப்படுத்த வேண்டும். பெற்றோரும் மிகுந்த எச்சரிக்கையை கையாண்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். முன்பு இருந்த வகையை விட வைரசின் புதிய மாறுபாடு பல புதிய பரிமாணங்களை எடுத்து வருகிறது.

சிறு குழந்தைகள் வீட்டில் இருந்தாலும், குடும்பத்தில் உள்ளவர்கள் வெளியில் சென்றுவரும்போது கொரோனாவைக் கொண்டு வந்துவிடுகின்றனர். பெரிய குழந்தைகள் என்றால் பக்கத்து வீடுகளில் விளையாடச் செல்லும்போது கொரோனா தொற்றும் சாத்தியம் உண்டாகிறது. வீட்டில் யாருக்காவது அறிகுறிகளுடனோ அல்லது அறிகுறி இல்லாமலோ கொரோனா தொற்று இருந்து தகுந்த பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்காதபோது, குழந்தைகளுக்கும் அது தொற்றி விடலாம். கொரோனா தொற்றுள்ள கர்ப்பிணிகள் பிரசவம் ஆனதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றாவிட்டால், அவரிடமிருந்து பச்சிளம் குழந்தைக்கு கரோனா தொற்றிவிடலாம்.

குழந்தைகளுக்குப் பெரும்பாலும் சாதாரண ஃபுளூ காய்ச்சலைப் போலவே கொரோனா தொற்றும் இருக்கிறது. மூக்கு ஒழுகல், காய்ச்சல், இருமல், தும்மல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, மூச்சுத் திணறல், சோர்வு ஆகியவை முக்கியமான அறிகுறிகள்.

இந்த அறிகுறிகளுக்காகப் பயப்படத் தேவையில்லை. மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு வீட்டிலேயே குழந்தையைத் தனிமைப்படுத்திக்கொள்ளலாம். சாதாரண சிகிச்சையிலேயே ஒரு வாரத்தில் அறிகுறிகள் மறைந்துவிடும். அடுத்த வாரத்தில் தொற்று குணமாகிவிடும். சோர்வு மட்டும் சில நாட்களுக்கு இருக்கலாம். ஊட்டச்சத்துள்ள உணவைக் கொடுத்துவந்தால், அதுவும் சரியாகிவிடும்.

குழந்தைக்குக் காய்ச்சல் 5 நாட்களுக்கு மேல் நீடிக்கிறது, வேகவேகமாக மூச்சுவிடுகிறது, நீலம் பூத்த உதடுகள், கடுமையான சோர்வு, எதையும் சாப்பிட முடியவில்லை, படுத்த படுக்கையாக இருக்கிறது, சுயநினவை இழக்கிறது, பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் குழந்தையின் ஆக்ஸிஜன் அளவு 95%-க்கும் குறைவாக இருக்கிறது. இந்த அறிகுறிகள் தோன்றுமானால் உடனடியாகக் குழந்தை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற வேண்டும்.

அரிதாகக் குழந்தைகளில் சிலர் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, கண்கள் சிவப்பது, உடலில் சிவப்புநிறத் தடிப்புகள், வெடிப்புடன் சிவந்த உதடுகள் போன்ற வேறுபட்ட அறிகுறிகளுடனும் (Paediatric Inflammatory Multisystem Syndrome – PIMS) காணப்படுகின்றனர். இவையும் கொரோனா தொற்றின் வெளிப்பாடுதான். பெற்றோர் இவற்றை அலட்சியப்படுத்தாமல், மருத்துவரிடம் ஆலோசித்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் யாருக்காவது கொரோனா தொற்று இருந்தால், குழந்தைக்குத் தொற்றுவதைத் தவிர்க்க அவர்களுக்கு அருகில் குழந்தையை விடக்கூடாது. தொற்றுள்ளவர்களும் சரி, குழந்தையும் சரி முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தனிமனித இடைவெளி காக்கப்பட வேண்டும். குழந்தையை வெளியிலோ பக்கத்து வீடுகளிலோ விளையாட அனுமதிக்கக் கூடாது. கைகளைச் சோப்புப் போட்டு அடிக்கடி கழுவச் சொல்ல வேண்டும். திருமணம், பிறந்தநாள் விழா போன்ற கூட்டம் கூடும் இடங்களுக்குக் குழந்தையை அழைத்துச் செல்லக் கூடாது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நீண்ட நாளைக்கு பிற்கு முதல்முறையாக உயர்வை சந்திதுள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் 1756 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த எண்ணிக்கை இன்று 1,859 ஆக உயர்ந்துள்ளது.

மக்கள் இனி தாமதிக்காமல் கொரோனா நடத்தை விதிகளை பின்பற்றுவது நல்லது. நாம் தான் தடுப்பூசி போட்டுவிட்டோமே, நமக்கென்ன என்று நினைத்தால் அதை விட முட்டாள் தனம் எதுவும் இருக்க முடியாது. ஏனெனில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ என பல நாடுகளில் அதிகரித்துள்ளது. தடுப்பூசி போட்டவர்களை கொரோனா பாதிக்காது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உயிர் பிழைக்கலாம். ஆனால் பாதிப்பு குறைவாக இருக்கலாம் ஆனால் 100 சதவீதம் உத்தரவாதம் கிடையாது. எனவே தடுப்பூசி போட்டாலும் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது நல்லது.

-சுரேந்தர்.

Comments