சிங்கம்புணரி அருகே நகை திருட்டு வழக்கில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகன் கைது! 20 பவுன் நகையை மீட்ட காவல்துறையினர்!

    -MMH

   சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூர் அருகே குளத்துப்பட்டி பகுதியில் நேற்று அதிகாலையில் உலகம்பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குளத்துப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் ஒரு வாலிபர் படுத்திருந்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் அந்த நபரை எழுப்பி விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதன் பின்பு நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், அவர் எஸ்.புதூர் ஒன்றியம் புல்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்த வலசைபட்டி ஊராட்சி துணைத்தலைவர் ரமேஷ் மகன் சந்தோஷ்(19) என்பதும், மாயாண்டிபட்டி, புல்லாம்பட்டி, எஸ்.புதூர், கிழவயல் மற்றும் பூலாங்குறிச்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற திருட்டு வழக்குகளில் சந்தோசுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

மேலும் இவருடன், குளத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாரதிராஜா, திருச்சி மாவட்டம் வெள்ளியங்குடிபட்டியை சேர்ந்த சுதாகர் ஆகியோரும் கூட்டாக சேர்ந்து நகைகளை திருடியதும் தெரிந்தது.

திருடப்பட்ட 20 பவுன் நகைகளை உருக்கி கட்டியாக அவர் வைத்திருந்தார். அந்த நகைகளை சந்தோஷிடம் இருந்து காவல்துறையினர் மீட்டனர். இதுகுறித்து உலகம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சந்தோசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்பு பரமக்குடி சிறையிலடைத்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள பாரதிராஜா மற்றும் சுதாகர் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments