40 அடி கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடிய சிங்கம்புணரி கோயில் காளைகள்! போராடி மீட்ட கொட்டாம்பட்டி தீயணைப்புத் துறையினர்!

-MMH

        மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியிலிருந்து உதினிப்பட்டி செல்லும் சாலையில் 40அடி ஆழமுள்ள ஒரு பாழடைந்த கிணறு உள்ளது. இதில் அந்த பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த சிங்கம்புணரி கோயில் காளைகள் இரண்டு, நேற்று மாலை தடுமாறி அடுத்தடுத்து விழுந்து விட்டன. இது குறித்து கொட்டாம்பட்டி தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவாகிவிட்டதால் மீட்பு பணி பாதிக்கப்பட்டது. மீண்டும் இன்று காலை பணிகள் துவங்கியது.

ஆனால்  தீயணைப்பு வீரர்கள் கிணறில் இறங்கியபோது, அங்கே கதண்டு எனப்படும் விஷ வண்டுகள் இருந்ததால் மீண்டும் காளைகளை மீட்கும் பணி தடைபட்டது. இதனைத் தொடர்ந்து விஷ வண்டுகளை அழிக்கும் முயற்சியில் கொட்டாம்பட்டி தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு 1/2மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவற்றை முழுவதும் அழித்தனர். இதனை அடுத்து கிணறில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், காளைகளை தடிமனான ரோப் கயிறுகளை கொண்டு கட்டி சுமார் 3மணி நேரம் போராடி இரு காளைகளையும் அடுத்தடுத்து மேலே தூக்கினர். இதனைத் தொடர்ந்து பல மணி நேரமாக உயிருக்குப் போராடிய காளைகள் மறுவாழ்வு பெற்றன.

தீயணைப்பு துறையினரின் முயற்சிகளுக்கு உள்ளூர் கொட்டாம்பட்டி பொதுமக்களும் பக்கபலமாக இருந்து உதவினார்கள்.  இரவு பகலாக, விஷ வண்டுகள் மற்றும் பல தடைகளை எதிர்கொண்டு ஒரே நேரத்தில் 2 காளைகளையும் மீட்ட கொட்டாம்பட்டி தீயணைப்புத்துறையின் நிலைய அதிகாரி வீரணன், விஜயராஜ், பாண்டி, ரஞ்சித் குமார், ராம்கி, தனபாண்டியன், சங்கர் உள்ளிட்டோருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

-மதுரை வெண்புலி & பாருக்.

Comments