பெரும் மகிழ்ச்சியில் சென்னை நான்கு சக்கர வாகன ஓட்டிகள்..!!

 

-MMH

        சென்னை ஓஎம்ஆரில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தப்படுவதாகவும், இந்த உத்தரவு நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருவதாகவும் பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்கு இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதன் மூலம் அந்த சாலையை பயன்படுத்தக்கூடிய லட்சக்கணக்கான பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசை வலியுறுத்த உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சென்னை பழைய மாமல்லபுரம் சாலை, 2009ம் ஆண்டு ரூ.300 கோடி செலவில், ஆறு வழி சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, ராஜீவ் காந்தி சாலை என பெயர் மாற்றப்பட்டது.

இந்தச் சாலையில், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், முதல் சிறுசேரி ஆகிய பகுதிகளில் 5 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு ஏற்றவாறு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த சுங்கச் சாவடிகளில் 2009ம் ஆண்டு முதல் இதுவரை 7 முறைக்கு மேல், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிக்குள் உள்ள சுங்கச்சாவடிகளால் பொருளாதார பாதிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கூறி வந்த நிலையில் கோரிக்கை வைத்து வந்தார்கள். சுங்கச்சாவடியை அகற்றக் கோரி கடந்தாண்டு எதிர்க்கட்சியாக இருந்த திமுக போராட்டம் நடத்தியது.

இதுதொடர்பாக, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதினார். நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. திமுக எம்பிக்கள் இதற்காக தனி போராட்டத்தையும் நடத்தினர்.

தேர்தல் பிரசாரத்தின் போது ராஜீவ் காந்தி சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் சுங்கச்சாவடிகளை நீக்குவது தொடர்பான அறிவிப்பு தற்போதைய சட்டமன்ற கூட்டத் தொடரில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்தது. அதேபோன்று, தமிழக சட்டப் பேரவையில் நேற்று நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதத்துக்கு பதிலளித்த பின்பு அமைச்சர் எ.வ.வேலு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது, சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் நிறுத்தம் செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில்,சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதையொட்டி, ராஜீவ் காந்தி சாலையில் (பழைய மகாபலிபுரம் ரோடு) உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது நாளை மறுநாள் முதல் நிறுத்தப்படுகிறது என்று கூறினார். இதனால், அந்த சாலைகளை பயன்படுத்தும் லட்சக்கணக்கான மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-அப்துல் ரஹீம்,திருவல்லிக்கேணி. 

Comments