ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகும் குழந்தைகள்!!!
ஆன்லைன் பாடங்களுக்காக மொபைல் போனை அடிக்கடி பயன்படுத்தும் குழந்தைகள், அதிலேயே 'கேம்' விளையாடுகின்றார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக, வீட்டிலிருக்கும் பள்ளி அல்லது கல்லுாரி செல்லும் மாணவர்கள் இணையதள விளையாட்டுகளை, நண்பர்களுடன் கூடி, அரட்டை அடித்து விளையாடிக் கொண்டிருப்பதை காண முடிகிறது.
குழுவாக விளையாடும் போது, எதிர்முனையிலிருக்கும் எதிரியாக சித்தரிக்கும் நபருடன், 'அடிடா அவனை, கொல்லுடா மச்சான்' என கத்திக் கொண்டும், கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டும் இருப்பதைக் காண முடிகிறது.விளையாட்டாகத் தானே இப்படி செய்கின்றனர் என எண்ணி, சும்மா இருந்து விட முடியாது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல, இணையதள விளையாட்டுகளில் மூழ்கி விட்டால், அது விளையாட்டே, வினையாக மாறி விடும் என்பதை பெற்றோர் அறிய வேண்டும்.நிழல் உலகில் கற்றுக் கொள்ளும் வன்முறை செயல்கள், வார்த்தைகளை நம் குழந்தைகள், நிஜ உலகிற்கும் பயன்படுத்த மாட்டார்கள் என சொல்ல முடியாது. குழந்தைகள் மனதில் வக்கிர எண்ணங்களை வளர்த்து, வன்மத்தை துாண்டி, ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவது தவறல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடும்.தினமும் ஏராளமாக அறிமுகமாகும் இணையதள விளையாட்டுகள், நம் பிள்ளைகளின் நேரத்தை வீணடிப்பதுடன், அவர்களின் மனநிலையையும் பாதிக்கச் செய்கின்றன.ஒரு கட்டத்தில் அதன் ஆபத்தை உணரும் பெற்றோர், அந்த விளை யாட்டை விளையாடக் கூடாது என குழந்தைகளை தடுக்கும் போது, விபரீதமான முடிவை அவர்கள் எடுக்க வாய்ப்பு உள்ளது.ஆன்லைன் விளையாட்டுகள் அனைத்துமே ஆபத்து என சொல்லவில்லை. ஆபத்தான ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட வேண்டாம் என்று குழந்தைகளுக்கு புரிய வைக்கவும் பல பெற்றோருக்கு, தங்கள் குழந்தைகள் எந்த விதமான விளையாட்டுகளை விளையாடுகின்றனர் என்பதே தெரியாது. குழந்தைகளிடம் கேட்டாலும், சொல்ல மாட்டார்கள்.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைன் மற்றும் வீடியோ விளையாட்டுகளில் ஆர்வமாக ஈடுபடும் குழந்தைகளுக்கு, எதிர்காலத்தில் சூதாட்டத்தில் ஆர்வம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, வரும் முன் காப்போம் என்ற விழிப்புணர்வு பெற்றோருக்கு அவசியம் தேவை. அதற்கும் இணையதளத்திலேயே வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் எவ்வளவு நேரம் இணையதளங்களில் செலவிடலாம் என்பதை, பெற்றோரே, 'செட்' செய்யவும் வாய்ப்பு உள்ளது.குறிப்பாக, 'மைக்ரோசாப்ட் பேமிலி சேப்டி ஆப், சைல்டு லாக், பேரன்டல் கன்ட்ரோல்' என பல உள்ளன. விளையாட்டு வினையாகாமல் இருக்க, பெற்றோர் தான் மிக கவனமாக இருக்க வேண்டும்!
பள்ளிக்கூடங்கள் திறந்தவுடன் மாணவர்களுக்கு மொபைல் போன் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். மாணவர்களின் மனநலம் சரியாக இருந்தால் தான் பாடங்கள் மனதில் ஏறும். அரசும் கல்வி நிறுவனங்களும் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
Comments