கம்பூர் ஊராட்சி அலங்கம்பட்டியில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்றம்! கிராமப்புறத்தில் புதிய முயற்சி!

 

-MMH

                 இந்திய ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்சட்டங்களின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை கிராமப்புற மக்களிடையே ஏற்படுத்தும் விதமாகவும், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், கம்பூர் பகுதி இளைஞர்களும் இணைந்து கம்பூர் ஊராட்சி அலங்கம்பட்டியில் 'மக்கள் நாடாளுமன்றம்' நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தக் கூட்டம் ஒரு நாடாளுமன்ற கூட்டத்தை நினைவுபடுத்தும் வண்ணம் அமைந்திருந்திருந்தது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வயதில் மூத்த உறுப்பினரான அலங்கம்பட்டி அழகு என்பவரால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, கொடி வணக்கம் செலுத்தப்பட்டது.  சபாநாயகராக செல்வராஜ் என்பவர் தேர்வு செய்யப்பட்டு, சபாநாயகர் இருக்கையில் அமர வைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, டெல்லி விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு 1நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

டெல்லியில் கடந்த 9 மாத காலமாக போராடி வரும் லட்ச கணக்கான விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. வேளாண்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தானம், புதிய வேளாண் மசோதாவை  அவையில் தாக்கல் செய்து பேசினார். 

அவையில் தாக்கல் செய்யப்பட்ட புதிய வேளாண் மசோதா பற்றிய விவதாதத்தில் உறுப்பினர்கள் பெரியவர், கம்பூர் ஜெயக்குமார், குமரன், அலங்கம்பட்டி குமார், அறங்கையன், கம்பூர் மானாழகு, கேசம்பட்டி ஜீவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் காளிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் மெய்யர் உள்ளிட்டவர்கள் விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த சட்டத்தினையும் திரும்ப பெற வலியுறுத்தி அவையில் பேசினார்கள். 

இறுதியாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், தான் டெல்லி போராட்ட களத்திற்கு நேரடியாக சென்று வந்த அனுபவங்களை விளக்கியதோடு,  இந்தப் போராட்டம் போல இனி ஒரு போராட்டம் நடைபெறுவது சந்தேகமே எனவும் உரையாற்றினார்.

மேலும், ஏற்கனவே விவசாயிகள் தங்கள் விளைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பாகவும், டெல்லி விவசாயிகளின் போராட்டம் காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமாரி வரை வாழும் மக்களுக்கானது, அதனால் அனைவரும் ஆதரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார். 

இறுதியில் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என கூட்டத்தில் பங்கு பெற்ற அனைவரும் கைகளை உயர்த்தி காட்டினார்கள். இதனால் வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேறியதை உறுப்பினர்கள் மேசைகள் தட்டி வரவேற்றனர். இறுதியில் தேசிய கீதம் பாடி, மக்கள் நாடாளுமன்றம் கலைந்தது. நூற்றுக்கணக்கானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-மதுரை வெண்புலி.

Comments