அக்டோபரில் கொரோனா மூன்றாவது அலையா? தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர் குழு புதிய எச்சரிக்கை!

 

-MMH

      நாட்டில் கொரோனா முதல் அலை 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உச்சமடைந்தது. அதுபோன்று இரண்டாம் அலை 2021 ஏப்ரல், மே மாதங்களில் உச்சமடைந்து தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்த அலையின் தீவிரம் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 25,072 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 389 பேர் உயிரிழந்தனர். கிட்டதட்ட 160 நாட்களுக்கு பிறகு, இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனால், ஒவ்வொரு மாநிலங்களும் கொரோனா பரவலுக்கு ஏற்ப ஊரடங்கில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியும், தளர்வுகள் அளித்தும் வருகின்றன.

பரவல் குறைந்து வருவதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்கவும், கடைகளை இரவு 10 மணி வரை திறந்து வைத்திருக்கவும், கடற்கரைக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா மூன்றாவது அலை குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர் குழு, மூன்றாவது அலை குறித்து பிரதமர் அலுவலகத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

அதில், ”கொரோனா மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் உச்சமடையும். இதில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. அதிகளவிலான குழந்தைகள் பாதிக்கப்படும்போது தேவையான மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், வென்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள் தேவைப்படும் அளவுக்கு நாட்டில் இருப்பு இல்லை. அதனால், குழந்தைகளுக்கான சுகாதாரத் தேவையை அதிகரிக்க வேண்டும்.

தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இணை நோய் மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஏற்கனவே நிலைமை மோசமாக உள்ளது. மேலும், கொரோனா வழிமுறைகளை பின்பற்றாமை, தாமதமாக தடுப்பூசி செலுத்துதல், போதுமான மருத்துவ கட்டமைப்பின்மை போன்றவை நிலைமையை இன்னும் மோசமாக்கக் கூடும் என்பதால், இதில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மருத்துவமனைகளிலும் 20% படுக்கைகளை குழந்தைகளுக்கு ஒதுக்குமாறு ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். பல மாநிலங்களில் குழந்தைகளுக்கான மருத்துவ வசதிகள் மற்றும் மருந்துகள், ஆக்ஸிஜனை சேமித்து வைக்கத் தொடங்கியுள்ளன. இரண்டாவது அலை பாதிப்பில் 50% பாதிப்புகள் மூன்றாவது அலையில் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பாரூக்.

Comments