கருங்காலக்குடியில் நடைபெறும் மேம்பாலப் பணிகள்! மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆய்வு!

  -MMH

   தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலையை அமைத்த பின்பு, கருங்காலக்குடியில் கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை சுமார் 200 நபர்கள் வரை சாலையைக் கடக்க முயற்சிக்கும் பொழுது தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

எனவே, கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட சு.வெங்கடேசன், தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, 'கருங்காலக்குடியில் மேம்பாலம் பெற்றுத் தருவேன்' என பொது மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தில் அவர் கடும் முயற்சிகள் மேற்கொண்டதில், 19 கோடி ருபாய் மதிப்பீட்டில் கருங்காலக்குடியில்  மேம்பாலம் கட்டப்படுவதற்கு ஒப்புதல் பெறப்பட்டது.

அதை இப்பகுதி மக்களுக்கான தீபாவளிப் பரிசாக, கடந்த 2020ஆம் ஆண்டு தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஒன்றிய அரசின் நிர்வாக அனுமதிக்கான அரசாணையையும் வெளியிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து, 2021 மார்ச்சு மாதம் பாலம் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. மேம்பால பணிகள் மெதுவாக நடைபெற்று வந்த நிலையில், இன்று (27/08/2021) காலை 11.00 மணியளவில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் கருங்காலக்குடியில் நடைபெறும் சாலை மேம்பாலப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த அவர் பாலம் கட்டுமான வேலைகளில் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார். அதுசமயம், மார்ச்சீய பொதுவுடமைக் கட்சியின் வட்டாரக் குழு செயலாளர் கண்ணன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மதுரை மாவட்டச்செயலாளர் பக்ருதீன் அலி அகமத், தும்பைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அயூப்கான் (எ) பாட்டையா, பறம்புமலை பாதுகாப்பு இயக்க செல்வராசு மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

-  வெண்புலி, மதுரை.

Comments