களவு போன நகை கண்டுபிடித்த காவல்துறையினருக்கு மக்கள் பாராட்டு..!!

   -MMH

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஹவுசிங் போர்டு காலணியை சேர்ந்தவர் சுதா. கயத்தார் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஜஸ்டின் இவர் கடந்த 23-ந் தேதி திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டிக்கு அரசு பேருந்தில் பயணித்தார். அப்போது கயத்தார் பேருந்து நிலையத்துக்குள் பேருந்து வந்த போது, தனது கைப்பைக்குள் இருந்த 20 சவரன் தங்க நகைகள் திருட்டு போயிருந்ததை  கவணித்தார். இதுகுறித்து சுதா கயத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரின் அறிவுறுத்தலின் படி கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கயத்தார் புதிய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டதில் இரண்டு பெண்கள் நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த நிலையில் கயத்தார் புதிய பேருந்து நிலையத்தில் போலீஸார் வாகன தணிக்கையில் இருந்த போது அங்கு சந்தேகிக்கும் படியாக நின்று கொண்டு இருந்த இரண்டு பெண்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த காளியம்மாள், முத்துமாரி என்ற தமிழரசி என்பதும் கடந்த 23-ந் தேதி பேருந்தில் சுதாவின் பையிலிருந்து தங்க நகைகளை திருடியதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது தூத்துக்குடி வடபாகம்,  நாலாட்டின்புதூர், சிப்காட் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 10 சவரன் நகை திருட்டில் ஈடுபட்டு இருப்பதும், திருடிய நகைகளை அம்பாசமுத்திரம் வடக்குரதவீதியை சேர்ந்த அய்யப்பனிடம் கொடுத்து வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படையினர், மூன்று பேரையும் கைது செய்து,  அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 35 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் பொதுமக்களுக்கு கூறுவது என்னவென்றால்; பேருந்துகளில் பயணம் செய்யும் போதோ, கோவில் திருவிழாவுக்கு செல்லும் போதோ பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த கும்பல் நெல்லையிலிருந்து திருச்சி வரை பேருந்தில் பயணித்து  திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

இதுபோன்ற தொடர் திருட்டு சம்பவங்களில் இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்தே ஈடுபட்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-வேல்முருகன் தூத்துக்குடி , ஈசா.

Comments