இணைய தளத்தில் வந்த சோதனை! ஏமாந்த பொறியாளர்! கைது செய்யப்பட்ட தூத்துக்குடி பெண்!!

    -MMH

தூத்துக்குடி மாவட்டம்: திருமண இணையத்தளம் முலம் ஐதராபாத் இன்ஜினியரிடம் ரு.80000 மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே செகந்திராபாத் சாயினிக்பூரி கண்டிகொன்டா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் வாசுதேவன் (வயது 34). சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வரும் இவர் தனது திருமணத்திற்காக ஒரு திருமண வரன் பார்க்கும் இணையதளத்தில் மணப்பெண் தேடி வந்தார். அந்த இணையத்தில் திவ்யா (28) என்ற ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் இருந்த ஐ.டி.யை வாசுதேவன் பார்த்துள்ளார்.

அந்த பெண் அவருக்கு பிடித்து இருந்ததால் வாசுதேவன் தனது விருப்பத்தை அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். மறுமுனையில் திவ்யாவும் வாசுதேவனை பிடித்திருக்கிறது என்று சம்மதம் தெரிவித்து தனது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். பின்னர் 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இந்த நிலையில் திவ்யா தன்னுடைய தோழிக்கு அவசரமாக ரூ.40000 தேவை படுகிறது என்று கூறி ஒரு வங்கி கணக்கை வாசுதேவனுக்கு அனுப்பி அதில் பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய வாசுதேவனும் அந்த வங்கி கணக்கில் கடந்த ஜீலை மாதம் 8-ந் தேதி ரூ.40 ஆயிரம் அனுப்பி வைத்தார். மீண்டும் திவ்யா பணம் தேவைப்படுவதாக கூறியதை அடுத்து கடந்த 4-ந் தேதி அதே வங்கி கணக்கில் ரூ.40 ஆயிரம் அனுப்பி உள்ளார்.

இதைத்தொடர்ந்து வாசுதேவன், திவ்யாவை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறி முகவரி கேட்டுள்ளார். அவரும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு முகவரி கொடுத்துள்ளார். அங்கு சென்று வாசுதேவன் விசாரித்த போது திவ்யா என்ற பெயரில் யாரும் இல்லை என்று தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாசுதேவன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வாசுதேவன், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி சைபர் கிரைம் கூடுதல் சூப்பிரண்டு இளங்கோவன் மேற்ப்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், வாசுதேவன் பணம் அனுப்பிய வங்கி கணக்கு தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடிவை சேர்ந்த தங்கவேலு மனைவி கீதா (36) என்பவர் பெயரில் இருப்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது கீதா  தான் திவ்யா என்ற பெயரில் திருமண இணையதளத்தில் அவரது உண்மையான புகைப்படத்தை பதிவேற்றம் செய்யாமல் வேறொரு பெண்ணின் புகைப்படத்தை பதிவேற்றும் செய்து, வாசுதேவனிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில், வாசுதேவனை ஏமாற்றியது போல் 20-க்கும் மேற்பட்ட நபர்களை கீதா ஏமாற்றி பணம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. 

பின்னர் கீதாவை போலிசார் நேற்று முன்தினம் இரவு பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  இணையதளங்கள் மற்றும் சமுக வலைதளங்கள் முலமாக சிலர் கொடுக்கும் தகவல்களை உறுதிபடுத்தாமல், அவர்களை நம்பி பொதுமக்கள் தங்கள் சுய விவரங்களையோ, புகைப்படத்தையோ மற்றும் பணத்தையோ அனுப்ப வேண்டாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருமண இணையத்தளம் முலம் ஐதராபாத் இன்ஜினியரிடம் ரூ.80000 மோசடி செய்த நாலுமாவடிவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-வேல்முருகன், தூத்துக்குடி.

Comments