மதுரையில் வணிகரிடம் ரூ.10 லட்சம் பறித்து கைதான காவல் ஆய்வாளர் வசந்திக்கு ஒரு நாள் போலீஸ் காவல்! நீதிமன்றம் உத்தரவு!

 -MMH

மதுரையில் வணிகரை மிரட்டி 10 லட்ச ரூபாய் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த காவல் ஆய்வாளர் வசந்தியை நீதிமன்ற காவலில் எடுத்து போலீசார் விசாரணை செய்ய நேற்று மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவர் பேக் கம்பெனிக்கு தேவையான பொருட்களை வாங்க ஜூலை மாதம் 5 தேதி, 10 லட்ச ரூபாய் பணத்துடன் மதுரை தேனி ரோடு அருகில் வந்த போது பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி மற்றும் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி ஆகியோர் அர்சத் வைத்திருந்த 10 லட்ச ரூபாய் பணத்தை மிரட்டி பிடிங்கிக் கொண்டதாக கடந்த ஜூலை 27ம் தேதி கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு 10ம் தேதி இவ்வழக்கில் தொடர்புடைய தேனியை சேர்ந்த பால்பாண்டி   உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகியோரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து மொத்தம் ₹.2,26,000/ பணம் கைப்பற்றப்பட்டது.

இந்த குற்றச் சம்பவத்தி்ல் தலைமறைவாக இருந்த மதுரை, நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வசந்தி, இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தனிப்படையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் ஆகஸ்ட் 26ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வைத்து வசந்தி மற்றும் அவரது உறவினர் பாண்டியராஜ் ஆகியோரை கைது செய்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர், மதுரை மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நேர் நிறுத்தினர்.

வசந்திக்கு செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு நிலக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் வசந்தி நேற்று மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்-1ல் நேர் நிறுத்தப்பட்டார். அவரை ஒருநாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க, நீதிபதி ராஜலிங்கம் உத்தரவிட்டதையடுத்து காவல்துறையினர், பாதுகாப்புடன் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

- மதுரை வெண்புலி.

Comments