இந்த தகர ஷீட்டுக்கு ரூ 1.54 கோடியா?.. விமர்சனங்களை ஆஃப் செய்த தூத்துக்குடி மாநகராட்சி!.. உண்மை என்ன ?

  -MMH

   தூத்துக்குடி: ஒரு நிழற்குடைக்கு ரூ 1.54 கோடி செலவானதாக தவறான செய்தி பரப்பப்பட்டதாக தூத்துக்குடி மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகு திட்டத்தின் கீழ் (2019-2020) ஆம் ஆண்டு எம்பி நிதியை கொண்டு ஒரு பேருந்து நிழற்குடையை கனிமொழி எம்பி திறந்து வைத்தார். இது பெரிதும் விமர்சனத்துக் குள்ளானது.

கடந்த 5 ஆம் தேதி திறக்கப்பட்ட அந்த நவீன பேருந்து நிலையம் சுமார் 1.54 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டதாகும். இதுகுறித்த கல்வெட்டு அந்த பேருந்து நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டுள்ளது.

பலருக்கும் அதிர்ச்சி அளித்த அந்த கல்வெட்டின் தொகை அனைத்து வசதிகளுடன் கூடிய 4 பெட்ரூம் உள்ள ஒரு பிளாட் வாங்கினாலே ஒரு கோடி ரூபாயை தாண்டாது. இந்த தகர ஷீட்டுக்கும் ஸ்டீல் ராடுக்கும் 1.54 கோடியா என கேட்டுள்ளார். இந்த நிலையில்  இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சி அளித்த இந்த தகவல் பொய்யானது என தூத்துக்குடி மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.


இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருக்கையில் தூத்துக்குடி மாநகர் வளர்ந்து வரும் தொழில் நிறுவனங்கள் நிறைந்த மாநகராகும். மாநகர் பகுதியில் பல்வேறு அரசு துறை நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அமையப் பெற்றுள்ளன. தனியார் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளன. எனவே பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் அதிக அளவில் பேருந்துகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

சீர்மிகு நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பணியான பேருந்து நிறுத்துமிடம் ரூ 19.25 லட்சம் வீதம் 8 இடங்களுக்கான மொத்தத் தொகை ரூ 154 லட்சம் மதிப்பீட்டில் நகரின் முக்கிய பகுதிகளான மிகவும் அவசியமான கீழ்கண்ட இடங்களில் பொதுமக்கள் காத்திருந்து பேருந்துகளில் ஏறும் வண்ணம் மேற்கூரையுடன் கூடிய பேருந்து நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது

1. திருவிக நகர், 

2 அரசினர் பாலிடெக்னிக் முன்பு, 

3. செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 

4. தந்தி ஆபிஸ் அருகில் 

5. சார் ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம், 

6. ஜிம்கானா கிளப், 

7 திரு இருதய ஆஸ்பத்திரி எதிர்புறம் மற்றும் 

8.ஏபிசி மகாலெட்சுமி கலைக் கல்லூரி முன்பு மேற்படி பணியானது ஜனவரி 28 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி முடிக்கப்பட்டது.

மேற்படி 8 இடங்களிலும் நவீன வசதிகளுடன் கூடிய ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது இதன் நீளம் 9.00 மீட்டர், அகலம் 3.00 மீட்டர் மற்றும் உயரம் 2.70 மீட்டர் ஆகும். இதில் ஒரே சமயத்தில் சுமார் 10 நபர்கள் அமரக் கூடிய இடவசதி, மாற்றுத் திறனாளிகளுக்கான எஸ்எஸ் கைப்பிடியுடன் கூடிய சாய்தள வசதி, பொதுமக்கள் செல்லும் இடங்களுக்கு வரும் பேருந்துகளை தெரிந்து கொள்ள பேருந்து எண்கள், செல்போன் சார்ஜர் போன்ற வசதிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு விளம்பரங்கள் மற்றும் அரசின் திட்டங்களை காணொலி காட்சிகள் மூலம் தெரிந்து கொள்ள 4.26 மீட்டருக்கு 1.20 மீட்டர் அளவிலான வண்ண எல்இடி வசதிகள் செய்யப்பட்டுள்ளன என தூத்துக்குடி மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

நாளைய வரலாறு  செய்திகளுக்காக,

-வேல்முருகன், தூத்துக்குடி.

Comments