பாளையில் போலீஸ்காரர் தம்பி கொலையில் 2 வாலிபர்கள் கைது - மேலும் 8 பேருக்கு வலைவீச்சு!!

  -MMH

    பாளையில் போலீஸ்காரர் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் 8 பேரை தேடி வருகின்றனர்.

நெல்லை சாந்திநகர் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் மக்தூர். இவரது மகன் அப்துல் காதர்(வயது 27). இவர் பாளை சங்கர் நகர் காலனியில் வசித்து வந்தார். இவரது சகோதரர் சாகுல் தாழையூத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் அப்துல் காதர் பாளை மிலிட்டரி கேண்டீன் அருகே உள்ள ஒரு இடத்தில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கும்பல் அப்துல் காதரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றது.

இது குறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாநகர துணை போலீஸ் கமி‌ஷனர் சுரேஷ்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை தேடி வந்தனர்.

விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாத்தான்குளத்தை சேர்ந்த பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்த மார்ட்டின் என்பவரின் கொலை வழக்கில் அப்துல் காதருக்கு தொடர்பு இருப்பதும், அந்த கொலைக்கு பழிக்குப்பழியாக அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது 10 பேர் கும்பல் இந்த கொலையில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சாத்தான்குளத்தை சேர்ந்த மார்ட்டினின் சகோதரர்கள் உள்பட 10 பேர் கும்பலை தனிப்படையினர் தேடி வந்தனர்.

அதில் மொட்டை சரவணன், விஜி என்ற விஜயகுமார் ஆகிய 2 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். மேலும் 8 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்தியாளர்,

-அன்சாரி, நெல்லை.

Comments