தூத்துக்குடி மாவட்டத்தில் மோட்டார் வாகன சட்டத்தை மீறியதாக ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு!!

   -MMH

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை செய்யவும், தங்கும் விடுதிகளில் குற்றவாளிகள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கியுள்ளனரா என சோதனையிடவும், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தணிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், வங்கிகள், ஏ.டி.எம் மையங்கள், நிதி நிறுவனங்கள், நகைக்கடைகள் உட்பட முக்கிய இடங்களை கண்காணிக்கவும், பழைய ரவுடிகளை தணிக்கை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்தல் போன்ற பல்வேறு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    அதன்படி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 96 தங்கும் விடுதிகள் சோதனையிடப்பட்டன. வாகன சோதனையில் 2500 வாகனங்கள் சோதனையிடப்பட்டு மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக 2056 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட பழைய குற்றவாளிகள் 47 பேர் மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகள் 75 பேர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களின் தற்போதைய இருப்பிடம் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் தணிக்கை செய்ய்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஏ.டி.எம் மையங்கள், நகைக்கடைகள் உட்பட 402 முக்கிய இடங்கள் கண்காணிக்கப்பட்டு உள்ளன. இது தவிர 44 பேர் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 107, 109 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒள்ளது. சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 19 பேர் கைது செய்யப்பட்டு 98 மதுபாட்டில்களும், சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 8 பேர் கைது செய்யப்பட்டு 597 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்த 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

-அன்சாரி, நெல்லை.

Comments