காரைக்குடியில் மூ.மு.க பொதுச் செயலாளர் எஸ்ஆர்.தேவர் கைது! 5 கோடி ரூபாய் மோசடிப் புகார்!

-MMH

      சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்ஆர்.தேவர் (எ) எஸ்.ராஜசேகர். இவர், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுச் செயலாளராகவும், 5 மாவட்ட விவசாய சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சூழியில் தற்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை எதிர்த்து, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.

இவர், கடந்த 2018ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் காமினேனி என்ற பிரபல மருத்துவமனையின் உரிமையாளர் லட்சுமி நாராயணன் என்பவரிடம், மருத்துவமனையின் வளர்ச்சிப் பணிக்காக 300 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி 5 கோடி ரூபாயை டாக்குமெண்ட் சார்ஜ் என்று வாங்கியிருக்கிறார்.

இதையடுத்து கடன் ஏதும் பெற்றுத்தராத நிலையில், லட்சுமி நாராயணன் தெலங்கானா போலீசில் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், விசாரணையில் இறங்கிய தெலங்கானா போலீசார், காரைக்குடி அண்ணாநகர் வீட்டில் பதுங்கியிருந்த எஸ்ஆர்.தேவரை நேற்று கைது செய்து காரைக்குடி வடக்கு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்பு காரைக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன் முன்பு ஆஜர்படுத்தி, மேல் விசாரணைக்காக தெலங்கானாவிற்கு அழைத்துச்சென்றனர். ஏற்கனவே, பத்திரிக்கையாளர்களை மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் எஸ்.ராஜசேகர் சிறைக்குச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-பாரூக், சிவகங்கை.

Comments