சேலத்தில் 595 பள்ளிகள் திறப்பு: உற்சாகமாக வந்த மாணவிகள்!!

  -MMH

    ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் மாவட்டத்தில் புதன்கிழமை முதல்கட்டமாக 595 பள்ளிகள் திறக்கப்பட்டன. மகிழ்ச்சியுடன் வந்த மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்று வகுப்பறைக்கு அனுப்பினர்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக மாணவ மாணவியர் படித்து வந்தனர். இந்தநிலையில் நோய்த்தொற்று குறைவின் காரணமாக தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்து வருகிறது.

அதன்படி செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள 595 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சேலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி திறக்கப்பட்டதால் மாணவிகள் மகிழ்ச்சியுடன் உற்சாகத்துடன் வந்தனர். மேலும் பள்ளி நுழைவு வாயிலில் அனைவருக்கும் கிருமி நாசினி மருந்து அளித்து கைகளை சுத்தப்படுத்திய பிறகே அனுமதிக்கப்பட்டனர். முகக் கவசம் அணிந்து இருக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஒரு வகுப்பறையில் 20 மாணவிகள் அமர வைக்கப்பட்டு ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தி வருகின்றனர். இதேபோல சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 295 பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்படவில்லை. படிப்படியாக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மாணவிகள் கூறுகையில், வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் படிக்கின்ற பொழுது அதிக இடையூறு ஏற்படுவதாகவும் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்துள்ளோம். பாடத்தில் எழுகின்ற சந்தேகங்களை ஆன்லைன் வகுப்பு அறிய முடியாத நிலை இருந்தது. தற்போது பள்ளியில் சக நண்பர்களிடம் பாடத்தில் உள்ள சந்தேகங்களையும் நேரடியாக ஆசிரியர்களும் கேட்டு கொள்வோம். இதனால் பள்ளிகள் திறந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் கூறுகையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாவட்டத்திலுள்ள 595 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

-  Ln இந்திராதேவி முருகேசன், மகுடஞ்சாவடி கலையரசன்.

Comments