உலகம்பட்டி அருகே சிறுமியை குழந்தைத் திருமணம் செய்த இளைஞர்! 9 பேர் மீது வழக்கு, 5 பேர் கைது!

 

   -MMH

   சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், உலகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தாய் இறந்து விட்டார். அப்பாவிற்கு கண் பார்வை கிடையாது. சிறுமியுடன் பிறந்தவர்கள் 6 ஆண்கள் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 

19.5.2021ஆம் தேதியன்று உலகம்பட்டி அருகே உள்ள விஜயபுரத்தைச் சேர்ந்த சின்னு மகன் வெள்ளைத்துரை (19) என்பவருக்கு கிராமத்தினர் ஏற்பாட்டில் சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளனர். பின்னர் திருமணம் நடந்து முடிந்த சில நாட்களில் வெள்ளைத்துரை,

சிறுமியை வேலைக்குச் சென்று சம்பாதித்து வருமாறும், பணம் கேட்டும் துன்புறுத்த ஆரம்பித்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமி வீட்டை விட்டு தனது அப்பா வீட்டிற்கு செல்ல முயற்சித்தபோது, 'உன்னை அடித்து தூக்கில் தொங்க விட்டு விடுவேன். உனது அப்பாவையும் கொன்று விடுவேன்', என வெள்ளைத்துரை கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அதன் பின்பும், சிறுமி அங்கிருந்து தப்பி, தனது அப்பா வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் உடனடியாக அவரது தந்தை திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்துள்ளார். இதனையடுத்து மகளிர் காவல்துறையினர் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பிற்கு தகவல் தெரிவித்ததால் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் எஸ்.புதூர் ஊர்நல அலுவலர் கயல்விழி, இதுகுறித்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முழுமையான விசாரணை மேற்கொண்ட திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சித்திரைச் செல்வி, சிறுமியை திருமணம் செய்த சின்னு மகன் வெள்ளைத்துரை, வெள்ளைத்துரையின் தாயார் சித்ரா, ராசு அம்பலம், பழனியப்பன், சிறுமியின் அண்ணன் சின்னத்தம்பி, பில்லன், பழனியாண்டி, சுகன்யா, ஆண்டிச்சாமி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மீது வழக்குப்பதிவு செய்தார்.

இவர்களில் வெள்ளத்துரை, சித்ரா, ராசு அம்பலம், பழனியப்பன், சின்னதம்பி ஆகியோரைக் கைது செய்து சித்ராவை விருதுநகர் மகளிர் சிறையிலும், மீதமுள்ள 4 பேரை மேலூர் கிளைச் சிறையிலும் அடைத்தனர்.

தலைமறைவான மற்றவர்களை, காவல்துறையினர் வலை வீசித் தேடியும் வருகின்றனர்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments