அனுமதியின்றி செயல்பட்ட சாய ஆலைகள் சீல் வைத்த அதிகாரிகள் !!

 

-MMH

     பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டூர் ரோடு, சி.டி.சி. காலனி பகுதியில் சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து துணிகளின் நிறத்தை மாற்றி கோவை, திருப்பூருக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்த நிலையில் சாயப்பட்டறைகளில் இருந்து வரும் கழிவுநீரை சுத்திகரிக்காமல் நேரடியாக மழைநீர் வடிகாலில் விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, சாயப்பட்டறைகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது எந்தவித உரிமமும் பெறாமல் சாயப்பட்டறைகள் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சாயபட்டறைகளை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆய்வின் போது நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில், ஜெயபாரதி மற்றும் மேற்பார்வையாளர்கள் உடன் இருந்தனர்.

நகராட்சி பகுதிகளில் இயங்கி வந்த சாயப்பட்டறைகள் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது தற்காலிகமாக சாயப்பட்டறை மூடப்பட்டு உள்ளது. மேலும் இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தகவல் தெரிவித்து, மேல்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதற்கிடையில் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் செல்லும் குழாய் அடைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மழைநீர் வடிகாலில் சாயப்பட்டறை கழிவுநீர் செல்வது தடுக்கப்பட்டு உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments