சிங்கம்புணரி அருகே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் வாளி பரிசு! ஊராட்சித் தலைவருக்கு அமைச்சர் பாராட்டு!

  -MMH

   இன்று தமிழ்நாடு முழுவதும் மாநில அளவிலான மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.  

இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம் முறையூர் ஊராட்சியிலும் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையேற்றார்.

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, முறையூர் ஊராட்சி மன்றத்தலைவர் சுரேஷ் மற்றும் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சுமார் 200 பேருக்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் கோவிஷீல்டு தடுப்பூசி  போடப்பட்டது. இதில் ஊராட்சி மன்றத்தலைவர் சங்கரின் பங்களிப்பாக அனைவருக்கும் பிளாஸ்டிக் வாளி ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்துப் பேசிய மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், 'மத்திய அரசு தமிழ்நாட்டிற்குத் தேவையான எண்ணிக்கையில் தடுப்பு மருந்துகள் கொடுப்பதில் சுணக்கம் காட்டியது.

மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியும், நேரில் சந்தித்தும் தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை பெற்று வந்தார்.

அதனால் தமிழக மக்களுக்கு தேவையான தடுப்பு ஊசிகள் வழங்கப்பட்டு கிடைக்கப்பெற்றது.  தமிழக மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட நமது முதல்வரின் செயல் பாராட்டுக்குரியதாகும்' என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து, தடுப்பூசி முகாம் துவக்கப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு உற்சாக பரிசாக பக்கெட் வழங்கப்பட்டது.  தொடர்ந்து, நிருபர்களிடம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசும்போது, 'நமது  இல்ல விழாக்கள் போல இன்று இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் அனைவரும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டு, பரிசும் பெற்றுச் சென்றது மிகுந்த வரவேற்புக்குரிய செயலாக நான் கருதுகிறேன். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த ஊராட்சி மன்றத் தலைவருக்கு எனது பாராட்டுக்கள்' என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.

முகாம் ஏற்பாடுகளை பிரான்மலை வட்டார மருத்துவ அதிகாரி நபீஸாபானு செய்திருந்தார்.

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments