கோவை பள்ளி மாணவிக்கு மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் விருது !!

  

-MMH

     கோவை தனியார் பள்ளி மாணவி கனிஷ்காஸ்ரீ, மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் கருத்தரங்கில் பங்கேற்று, கொரோனா சமயத்தில் சீனாவில் பின்பற்ற தவறிய விஷயங்கள் குறித்து விளக்கியதற்கு, விருது அளிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் கீழ், மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு மாதிரி ஐக்கிய நாடுகள் சபை (Model united nation). இதில், மாணவர்கள் பங்கேற்று, நாட்டின் பிரச்னைகள் குறித்து ஆராயவும், தீர்வு காணவும், ஆண்டுதோறும் கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

இதில் பங்கேற்க, நடப்பாண்டில் நாடு முழுவதும் இருந்து, பல மாணவர்கள் விண்ணப்பித்தனர். தேர்வு செய்யப்பட்ட, 130 மாணவர்களுள், கொடுக்கப்பட்ட தலைப்புக்கு சரியான கருத்துகளை முன்வைத்ததோடு, பிரச்னைக்கு தீர்வு வழங்கிய, கோவை நேஷனல் மாடல் பள்ளி மாணவி கனிஷ்காஸ்ரீக்கு, விருது வழங்கப்பட்டுள்ளது.கனிஷ்காஸ்ரீ கூறுகையில், எங்கள் பள்ளியில் இருந்து மட்டுமே 22 மாணவர்கள், இக்கருத்தரங்கில் பங்கேற்றோம். 

பள்ளி மூலமாக தான், மாதிரி ஐக்கிய நாட்டு சபையின் கருத்தரங்கு பற்றி தெரியவந்தது. இரு நாட்கள், குறிப்பிட்ட சமூக பிரச்னையை, எந்த கோணத்தில் பார்ப்பது, தரவுகளை எப்படி தேடுவது, கருத்துகளை முன்வைத்தல் குறித்த, பயிற்சிகள் மட்டும் வழங்கப்பட்டன.அடுத்த இரு நாட்கள், குழுவின் தலைவர், துணை தலைவர் சார்பில், ஒவ்வொருவரையும் ஒரு நாட்டின் பிரதிநிதியாக குறிப்பிட்டு, அந்நாட்டு பிரச்னைகள் குறித்து, பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. 

நான், சீனா நாட்டின் பிரதிநிதியாக, கொரோனா சமயத்தில், அரசின் பொருளாதார கொள்கை, மருத்துவ சிகிச்சையில் பின்பற்ற தவறிய விஷயங்கள் உள்ளிட்டவை குறித்து தெரிவித்தேன்.இதற்காக, சிறந்த டெலிகேட் அவார்டு வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், பெற்றோர், நண்பர்களின் கூட்டு ஒத்துழைப்பால் தான், இது சாத்தியமானது. இக்கருத்தரங்கில் பல விஷயங்களை மாணவ பருவத்தில் கற்கும் வாய்ப்பு கிடைத்தது, என்றார்.

-சுரேந்தர்.

Comments