பருவ மழை பொய்த்து போனதால் வறண்டு வரும் குளங்கள் விவசாயிகள் ,பொதுமக்கள் அச்சம் !!

-MMH

          மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவைக்கு, தென்மேற்கு பருவமழை, மற்றும் வடகிழக்கு பருவமழை மூலம் மழைநீர் கிடைக்கிறது. இதில் தென்மேற்கு பருவமழை ஆண்டின் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையும், வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர் ஆகிய 2 மாதங்களிலும் பெய்கிறது.  இவ்வாறு கிடைக்கும் மழைநீரை தேக்கி வைக்க குறிச்சி குளம், உக்குளம், கோளராம்பதி குளம், செங்குளம், பேரூர் பெரிய குளம், சொட்டையாண்டி குட்டை உள்பட 24 பெரிய குளங்கள் உள்ளன.

கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை சராசரியை தாண்டி பெய்தது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், அனைத்து நீர்நிலைகளும் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை 54 சதவீதம் அளவிற்கு குறைவாக பெய்து உள்ளது. இதனால் நொய்யால் ஆறு வறண்டு காணப்படுகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவையில் தென்மேற்கு பருவமழை 200 மி.மீ. அளவிற்கு பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 97 மி.மீ. அளவிற்கே பெய்து உள்ளது. இதனால் நொய்யல் ஆற்றில் இந்த ஆண்டு போதிய அளவு தண்ணீர் வரத்து இல்லை. சித்திரைச்சாவடி அணைக்கட்டு வரை மட்டுமே ஆற்றில் தண்ணீர் வந்தது. இதன்காரணமாக கோவை குளங்களில் தண்ணீர் வரத்து குறைந்ததால் பெரும்பாலான குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

குறிப்பாக பேரூர் செங்குளத்தில் 20 சதவீதம் அளவிற்கும், குனியமுத்தூர் சின்னக்குளத்தில் முற்றிலும் தண்ணீர் இன்றி காணப்படுகிறது. பேரூர் பெரிய குளத்தில் 50 சதவீதமும், சொட்டையாண்டி குட்டையில் 10 சதவீதமும் மட்டுமே தண்ணீர் காணப்படுகிறது. நொய்யல் ஆற்றில் உள்ள முதல் குளமான உக்குளத்தில் மட்டும் 90 அளவிற்கும், கோளாராம்பதி, நரசாம்பதி உள்ளிட்ட குளங்களில் ஓரளவிற்கும் தண்ணீர் உள்ளது. தென்மேற்கு பருவமழை பொய்த்து போன நிலையில், வடகிழக்கு பருவமழை கைகொடுத்தால் மட்டுமே குளங்களில் தண்ணீர் மட்டம் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments