பொள்ளாச்சியில் வாலிபரை அடித்து கொலை செய்தது யார்..?

   -MMH

   கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி ராமர்கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (50). கட்டட தொழிலாளியான இவருக்கு மூத்த மகன் செந்தில்குமார் (24) மற்றும் 16 வயதில் இளைய மகனும் உள்ளனர். 

இந்த நிலையில் தந்தை கதிர்வேல் மற்றும் இரண்டு மகன்களும் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது தந்தை கதிர்வேல் மற்றும் இளைய மகன் இருவரும் சேர்ந்து கம்பியால் தாக்கியதில் செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து தந்தை மற்றும் இளைய மகன் இருவரும் சேர்ந்து மயங்கிய செந்தில்குமாரை தூக்கி அருகில் உள்ள பாலத்தின் அருகே கொண்டு சென்று வீசிவிட்டு வாகன விபத்தில் செந்தில்குமார் காயமடைந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்‌.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செந்தில்குமாரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செந்தில்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் உயிரிழந்தார். 

பின்னர் இறந்த செந்தில்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததையடுத்து போலீசார் செந்தில்குமார் வீட்டிற்கு சென்று விசாரித்தபோது மது போதையில் தந்தை கதிர்வேல் மற்றும் செந்தில்குமாரின் உடன்பிறந்த சகோதரரான் இருவரும் சேர்ந்து கம்பியால் செந்தில்குமார் தாக்கியது தெரியவந்தது.

மகனை தாக்கி கொலை செய்து நாடகமாடிய தந்தை மற்றும் இளைய மகன் இருவரையும் கைது செய்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தந்தை கதிர்வேலை கோவை மத்திய சிறையிலும், இளையமகனை உடுமலை கிளை சிறையிலும் அடைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments